சென்னையை நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வட தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அங்கு நிலை கொண்டிருந்தது. இந்நிலையில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதை தொடர்ந்து, வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா-வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வர உள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ.வேகத்தில் கரையை நேருக்கு வருகிறது. இன்று நள்ளிரவு வரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து கொண்டே இருக்கும். தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வருவதால் வட தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நவ.23,24,25 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் ஆந்திர கடலோர பகுதி, தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும்.

இலங்கை கடலோரப் பகுதி, தென் மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். இவ்வாறு கூறியுள்ளது.

Related Stories: