யானை தாக்கி பெண் பலி விவகாரம்; பாஜக எம்எல்ஏவுக்கு தர்மஅடி: சட்டையை கிழித்து தாக்கிய மக்கள்

சிக்மகளூரு: யானை தாக்கி பெண் பலி விவகாரத்தில் பாஜக எம்எல்ஏவை பொதுமக்கள் சட்டையை கிழித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு அடுத்த குந்தூர் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில், ஷோபா (45) என்ற பெண் உயிரிழந்தார். யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் அளிக்கப்பட்டன. அதையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்களை சமாதானப்படுத்துவதற்காக முடிகெரே பாஜக எம்எல்ஏ குமாரசாமி, கிராம மக்களை சந்திக்க சென்றார்.

அவர் பொதுமக்களை சமாதானப்படுத்தி, யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், அவர் தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருவதாக கூறி கூட்டத்தில் இருந்த சிலர் எம்எல்ஏவின் சட்டையை கிழித்து தாக்கினர். சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்த சிலர், எம்எல்ஏவை மீட்டு பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: