×

உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் கத்தாரை வீழ்த்தி ஈக்வடார் அபார வெற்றி

தோகா: பிபா உலக கோப்பை கால்பந்து முதல் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈக்வடார் அணி அபார வெற்றி பெற்றது. 22வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில், இந்த உலக கோப்பையை நடத்தும் கத்தாரும் ஈக்வடாரும் மோதின. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் கத்தார் கோல்கீப்பர் சாத் அல் ஷபந்தை தடுக்க முயற்சிக்க கையை நீட்ட, அவரது கை மறித்து ஈக்வடார் வீரர் வாலென்சியா கீழே விழுந்தார். இதையடுத்து ஷீப்-க்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டு, வாலென்சியாவிற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வாய்ப்பை அருமையாக வாலென்சி பயன்படுத்தி கோல் அடித்தார். இந்த கோல் ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் கிடைத்தது. தொடர்ந்து ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் 2வது கோல் அடித்து வாலென்சி அசத்தினார். 2-0 என ஈக்வடார் முன்னிலை வகித்தபோது, முதல் பாதி ஆட்டம் முடிந்தது. ஆட்டத்தின் 2ம் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. எனவே 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி ஈக்வடார் அணி அபார வெற்றியுடன் இந்த உலக கோப்பையை தொடங்கியது.

பிபா உலக கோப்பையை நடத்தும் நாட்டின் அணி தான் முதல் போட்டியில் ஆடும். அப்படி உலக கோப்பையை நடத்திய எந்த அணியும் முதல் போட்டியில் தோற்றதில்லை. முதல் முறையாக பிபா உலக கோப்பையை நடத்தும் கத்தார் அணி முதல் போட்டியில் தோற்று வரலாற்று தோல்வியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : World Cup ,Ecuador ,Qatar , World Cup Football: Ecuador beat Qatar in first match
× RELATED சில்லி பாயின்ட்…