×

ஆர்.எஸ்.மங்கலம் கடலோர கிராமங்களில் கருவாடு உலர் தளம் அமைக்க வேண்டும்-மீனவர்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கடலோர கிராமங்களில் மீன்களை உலர்த்துவதற்கு கருவாடு உலர் தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்திலேயே நீண்ட கடற்கரை கொண்ட பகுதி ராமநாதபுரம் மாவட்டம் ஆகும். இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் உள்ளது. இங்கு மீனவர்களால் கடலில் பிடிக்க கூடிய இறால், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன் வகைகள் உள்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், பர்மா, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றது. இதனால் நாட்டிற்கு ஏராளமான அன்னிய செலாவணி கிடைக்கின்றது. குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மோர்பண்ணை கிராமம் முற்றிலும் மீனவர் கிராமம் ஆகும்.

இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, தொண்டி, நம்புதாளை, சோளியக்குடி, புதுப்பட்டிணம், முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டிணம், முனிவீரன்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போதே மீன்கள் கெடாமல் கொண்டு வருவதற்காக இங்கிருந்தே ஐஸ் கட்டிகளை வாங்கி செல்கின்றனர். அங்கு பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் கட்டி பாக்ஸில் போட்டு பாதுகாப்பாக கொண்டு வருகின்றனர்.

ஐஸ் பாக்ஸ்கள் மூலம் கொண்டு வரப்படும் இறால், நண்டு, கனவாய் மற்றும் மீன்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் மீன் கம்பெனிகளில் விற்பனை செய்கின்றனர். இதில் ஏற்றுமதி தரம்வாய்ந்த மீன்களை மட்டுமே ஏற்றுமதி நிறுவன கம்பெனிகள் நேரடியாகவும், சிறு கம்பெனிகள் மூலமாகவும் கொள்முதல் செய்யப்படுகின்றது. மற்ற மீன்கள் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மதுரை, திருப்பூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கின்றன. இவ்வாறு விற்பனை செய்தது போக மீதமுள்ள மீன்களை மீனவர்கள் முழுவதுமாக கெட்டு விடாமல் உப்பு கலந்து கருவாடாக உலர்த்தி பல்வேறு நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் கருவாடு உலர்த்துவதற்கான உலர் தளங்கள் இல்லாததால் மீனவர்கள் மீன்களை சாலைகளில் போட்டு உலர்த்த கூடிய ஒரு சூழல் உள்ளது. இவ்வாறு சாலைகளில் மீன்களை உலர வைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல், உலர்ந்த கருவாடுகளை வாங்கி உண்பவர்களுக்கும் சுகாதாரம் பாதிக்கும் சூழல் நிலவுகிறது. இப்பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு வகையில் மீனவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஆனால் கருவாடு உலர்த்துவதற்கு கடற்கரை பகுதியில் உலர்தளம் இல்லாததால் மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே கருவாடு உலர்தளம் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘அரசு சார்பாக எங்கள் ஊரில் மீன் இறங்கு தளம் அமைத்து கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அது நாங்கள் மீன் கொண்டு வந்து இறக்குவது மற்றும் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகளை பழுது நீக்குவது, ஓய்வு எடுப்பது உள்ளிட்டவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் கருவாடு உலர்த்துவதற்கு உலர்தளம் இல்லை. கடந்த ஆட்சியில் குறைந்த அளவு இடத்தில் உலர்தளம் அமைத்து தந்தனர்.

அது சிதிலமடைந்துவிட்டது. இதனால் இடம் இல்லாமல் ரோட்டிலும் நடை பாதைகளிலும் மீன்களை உலர வைக்கின்றோம். சில நேரங்களில், என் வீட்டின் முன்பாக போடாதே, உன் வீட்டிற்கு முன்பாக போடாதே என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை வந்து விடுகிறது. மீன்களை சரியான முறையில் காய வைக்காவிட்டால் வீணாகிவிடும். அதனை கீழே தான் கொட்ட வேண்டும். அதனால் எங்களின் உழைப்பு வீணாகிவிடும். கஷ்டப்பட்டு மழையிலும் வெயிலிலும், காற்றிலும் கிடந்து மீன்பிடித்து வந்து பலன் இல்லாமல் போய்விடும். எனவே மீனவர்களின் நலன் கருதி கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் அதிக இடங்களில் மீன்களை உலர்த்துவதற்கான கருவாடு உலர்தளம் அமைத்து தர வேண்டும்’’ என்றனர்.

Tags : S.S. Mangalam ,Karuvadu ,Fishermen , RS Mangalam : Karuvadu dry floor should be set up for drying fish in coastal villages near RS Mangalam.
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...