பிரிந்த மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலி தொழிலாளி-கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கோவை :  கோவையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு நிலவியது.கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் வீரன் (35). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 11 மணியளவில் கணபதி பகுதியில் உள்ள சுமார் 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் லுங்கி வேட்டி மட்டும் அணிந்தபடி ஏறினார். உச்சியில் ஏறி அமர்ந்து  கொண்டு அவர் கூச்சலிட்டார். ‘‘குதிச்சு சாக போகிறேன்’’ என அவர் கூறியதை கேட்டதும் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அந்த பகுதி மக்கள் கணபதி தீயணைப்பு துறையினருக்கும், சரவணம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அங்கே சென்று அவரை கீழே இறங்கி வருமாறு கூறினர். அவர் இறங்கி வர மறுத்து விட்டார். மேலும் யாரும் ஏறி வரக்கூடாது. வந்தால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார். போலீசார் ஒலிப்பெருக்கி மூலமாக அவரிடம் பேசினர். அப்போது எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து வைப்பதாக கூறினர். இதை கேட்ட வீரன், ‘‘என் மனைவி என்னை விட்டு பிரிந்துவிட்டார். அவர் இங்கே வேறு ஒருவருடன் இருக்கிறார். அவரை மீட்டு என்னிடம் சேர்த்து வையுங்கள்’’ எனக்கூறினார்.

‘‘மனைவி குறித்த விவரங்கள் தெரியவில்லை. கீழே இறங்கி வந்தால் பேசலாம்’’ என போலீசார் கூறினர். இதை வீரன் கேட்கவில்லை. மாலை நேரத்தில் செல்போன் டவர் பராமரிக்கும் செந்தில் மற்றும் 2 தீயணைப்பு துறையினர் டவர் மேலே சென்றனர். அவர்கள் வீரனிடம் பேசினர். அப்போது, ‘‘உங்கள் பிரச்னை சரியாகும். எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். மேலே இருந்தால் மயங்கி விழுந்து விடுவீர்கள்’’ என எச்சரித்தனர்.

ஆனாலும் சிறிது நேரம் அடம் பிடித்த வீரன் மாலை 6 மணிக்கு கீழே இறங்கி வந்தார். சுமார் 7 மணி நேரம் டவரில் அமர்ந்து அடம் பிடித்த இவரிடம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். மதுபோதையில் இருந்த இவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். டவரில் பல இடங்களில் மாறி மாறி சென்றபோது உடலில் கம்பி கீறி காயம் ஏற்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் விசாரணை நடத்தி அதற்கு பிறகு வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். டவரில் ஏறி 7 மணி நேரம் தொழிலாளி அலைய வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: