தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி பாலாற்று வெள்ளத்தில் இறங்கி மக்கள் மனித சங்கிலி போராட்டம்-வேலூர் அருகே பரபரப்பு

வேலூர் : வேலூர் அருகே கீழ்மொணவூர்-திருமணி இடையே பாலாற்றில் தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி, வெள்ளநீரில் இறங்கி பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் அடுத்த கீழ்மொணவூர் பாலாற்றின் இக்கரை முதல் அக்கரை வரை மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. இதில் பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம், ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஆட்டோ ஒட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்க அமைப்பாளர் மார்தாண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, துணைத்தலைவர் பத்மாவதி ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்க நிர்வாகி விஜயா வரவேற்றார். இதில் பங்கேற்றோர் கீழ்மொணவூரில் இருந்து திருமணி வரை பாலாற்றில் சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் ஓடும் வெள்ளத்தில் இறங்கி, வரிசையாய் கைகோர்த்தபடி நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது, கீழ்மொணவூர்-திருமணி முதல் தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கீழ்மொணவூர்-திருமணி இடையே பாலாற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மேல்மொணவூர், கீழ்மொணவூர் பகுதியில் தொழிலாளர்கள் அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம், அரசு, தனியார் ஐடிஐக்கள், மெக்கானிக் ஷெட்கள் உள்ளது. மேல்மொணவூரில் வணிக வளாகம், விமான நிலையம், டைடல் பார்க் அமைய உள்ளதால் அதிகளவு போக்குவரத்து நடைபெறும்.

 திருமணி-கீழ்மொணவூர் இடையே பாலாற்றில் மண் பாதையை பொதுமக்கள் சொந்த செலவில் அமைத்து பயன்படுத்தி வந்தனர். அந்த பாதையும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக பாலாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் 20 கிலோ மீட்டர் சுற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் கீழ்மொணவூர்-திருமணி பாலாற்றில் தரைப்பாலம் அமைக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.பாலாற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் லத்தேரி, விரிஞ்சிபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: