தொட்டியம் , தா.பேட்டை பகுதிகளில் விவசாய பணிகளுக்கு தளவாட பொருட்களை தயாரிக்கும் வடமாநில தொழிலாளர்கள்

தொட்டியம் : தொட்டியம், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தங்கி வடமாநில தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு தளவாட பொருட்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் தொட்டியம், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவையடுத்து ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் போர்வெல்களிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் தரிசாக போட்டிருந்த நிலங்களிலும் விவசாயம் மேற்கொள்ள பூர்வாங்க பணிகளை செய்து வருகின்றனர்.

அதற்காக நிலத்தில் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றுதல், நிலத்தை சமன்படுத்துதல், முள் புதர்களை அகற்றுதல், கரையமைத்தல், உழவடித்தல், நிலத்திற்கு தழை சத்து அளித்தல் ,பயிர் சாகுபடி செய்யும் இடங்களில் நிழல் விழாமல் இருக்க மர கிளைகளை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தேவைப்படும் மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை, கதிர் அரிவாள், மரத்தைப் பிளக்கும் கோடாலி உள்ளிட்ட இரும்பிலான விவசாய கருவிகளை சாலை ஓரத்திலேயே இரும்பை உருக்கி புதிதாக செய்து கொடுக்கின்றனர்.

இதுகுறித்து வடமாநில தொழிலாளி பல்பீர் சிங் கூறுகையில், நாங்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து பிழைப்பிற்காக வந்திருக்கிறோம்.தமிழகத்தில் இந்த மாதங்களில் மழை பெய்யும் என்பதால் குடும்பத்துடன் விவசாயத்திற்கு பயன்படும் இரும்பிலான உழவு கருவிகள் செய்து கொடுப்பதற்காக பிழைப்பு தேடி வந்துள்ளோம்.

எங்களிடம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரையிலான விவசாய உபகரண பொருட்கள் விலைக்கு கிடைக்கும். சாலையோரத்தில் கூடாரம் அமைத்து குடும்பத்துடன் தங்கி உள்ளோம். கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை செய்து கொடுக்கிறோம். என்றார்.

உழவர்களுக்கான கருவிகளை தயார் செய்ய இரும்பில் உருக்கி தயார் செய்யும் பணியில் ஈடுபடும் ஆண்களுக்கு அவர்களுடன் வந்துள்ள மனைவி, மகள், மகன்கள் பட்டறையில் கனமான இரும்பு சுத்தியலால் அடித்து உதவி செய்கின்றனர். பின்னர் சாலை ஓரத்திலேயே சப்பாத்தி தயார் செய்து சாப்பிடுகின்றனர். கார், லாரி ஆகியவற்றின் இரும்பு பட்டைகளில் தயார் செய்யப்படும் விவசாய தளவாடப் பொருட்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: