நாளைமறுநாள் அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ1,200

அண்ணாநகர்: தமிழகத்தில் பெய்துவரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மல்லி, முல்லை மற்றும் ஜாதிமல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நாளை மறுநாள் அமாவாசையை என்பதால் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை ஒரு கிலோ மல்லி 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை 600க்கும் ஜாதி மல்லி 500க்கும் கனகாபரம் 500க்கும் விற்பனையாகிறது. சாமந்தி 60க்கும் சம்பங்கி 75க்கும் சாக்லேட் ரோஸ் 140க்கும் பன்னீர் ரோஸ் 80க்கும் மஞ்சள் ரோஸ் 70க்கும் அரளி 150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை புறநகர் பூ வியாபாரிகள் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு   வாங்கிய விலையைவிட இன்று காலை  இருமடங்கு விலை உயர்ந்துள்ளது’ என்றனர். பூ மார்க்கெட் சங்க தலைவர் மூக்காண்டி கூறும்போது, ‘’மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மல்லி, முல்லை, ஜாதி மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலை மட்டும் உயர்ந்து வந்த நிலையில், நாளை மறுநாள் அமாவாசை முன்னிட்டு மீண்டும் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயரும்’ என்றார்.

Related Stories: