முதல்வர் குறித்து டிவிட்டரில் அவதூறு பதிவு; புதுச்சேரியில் பதுங்கி இருந்த கிஷோர் கே.சாமி அதிரடி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: முதல்வர் குறித்து டிவிட்டர் பக்கத்தில் அவதூறு பதிவு வெளியிட்டது குறித்த வழக்கில் புதுச்சேரியில் தலைமறைவாக இருந்து வந்த கிஷோர் கே.சாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் கே.சாமி. பாஜக ஆதரவாளரான இவர், கடந்த நவம்பர் 1ம் தேதி இரவு மழை வெள்ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக சில கருத்துகளை பதிவு செய்திருந்தார். இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறையில் திமுக ஐடி பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து கிஷோர் கே.சாமி மீது அவதூறு பரப்பியது உள்ளிட்ட 3க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்க கோரி சைபர் க்ரைம் போலீசார் சார்பில் கிஷோர் கே.சாமிக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.

மேலும், போலீசார் கைது  செய்வதில் இருந்து தப்பிக்க கிஷோர் கே.சாமி சென்னை முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சைபர் க்ரைம் போலீசார் சார்பில் சமூக ஊடகங்களில் பிறரை துன்புறுத்தும் வகையில் கருத்துக்கள் பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைதொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பின்னர் தலைமறைவான கிஷோர் கே.சாமி புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக சைபர் க்ரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி புதுச்சேரி விரைந்த சைபர் க்ரைம் போலீசார் இன்று அதிகாலை கிஷோர் கே.சாமியை கைது செய்தனர். அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று மாலை சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

Related Stories: