அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அம்பத்தூர்: சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது அம்பத்தூர் ரயில் நிலையம். அம்பத்தூர் அருகே உள்ள ஆசிரியர் காலனி, வரதராஜபுரம், காமராஜபுரம், ராமாபுரம், மங்களபுரம் மற்றும் அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள், இந்த ரயில் நிலையத்தை உபயோகித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டதால்  இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி கடந்த 15 ஆண்டுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அம்பத்தூர் ரயில் நிலையம் வழியாக நாளொன்றுக்கு நூற்றுக் கணக்கான புறநகர் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதனால் ரயில்வே கேட் போடும் நேரத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டியுள்ளது. ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக சில ஆண்டுக்கு முன்பு ரயில்வே இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது.இரும்பு மேம்பாலத்தின் உயரம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் பயன்படுத்துவதில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அரக்கோணம், திருத்தணி திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி ஆகிய  பகுதி மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி சிரமத்துடன் ரயில்வே கேட்டை கடந்து பிறகு சென்னை புறநகர் பகுதிகளான அண்ணாநகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, தி.நகர் ஆகிய பகுதிகளுக்கு பணிக்கு  சென்று வருகின்றனர்.

ரயில்வே கேட்டை கடந்துசெல்லும்போது பலர் விபத்தில் சிக்கியுள்ளனர்.  கடந்த 3 மாதத்துக்கு முன் அடுத்தடுத்து 2 பேர் ரயில் மோதி பலியாகியுள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மழை காலங்களில் ரயில்வே கேட்டை கடக்கும்போது ரயில் வருவதுகூட தெரிவதில்லை. எனவே, பொதுமக்கள் நலனை கருத்திகொண்டு அம்பத்தூர் ரயில்நிலையம் அருகில் சுரங்கப்பாதை அமைக்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: