×

ஜெயங்கொண்டசோழபுரம் 11வது வார்டில் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் மண் சாலை மேம்படுத்தப்படுமா?

*கிராமமக்கள் எதிர்பார்ப்பு

கிருஷ்ணராயபுரம் : கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தும் மண் சாலையை தார்சாலை மற்றும் பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் 11வது வார்டு உடையகுளத்துபட்டி கிராமம் உள்ளது. இந்த வார்டில் உள்ள சுக்காமேடு முதல் பழைய ஜெயங்கொண்டசோழபுரம் பேரூராட்சி எல்லை வரையான திருக்காம்புலியூர் பஞ்சாயத்தை இணைக்கும் சாலையில் 800 மீட்டர் மண் சாலையாக உள்ளது. இந்த சாலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் மண் சாலையை தார்சாலையாக அமைத்து தர பல ஆண்டுகளாக போராடி வருவதாக கூறப்படுகிறது. இதில் குறுக்கே கோவகுளம் குளத்திற்கு காட்டாறு தண்ணீர் செல்லும் வாரி உள்ளது. இந்த வழியாக தான் சின்னமலைப்பட்டி, மணவாசி ஆகிய பகுதியிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பழைய ஜெயங்கொண்டம் அரசு பள்ளிக்கு தினம்தோறும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் பழையஜெயங்கொண்டம் செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டி உள்ளது.

மண் சாலை சேதமடைந்து உள்ளதால் இவ்வழியாக அவசர தேவைக்கு செல்லும் போது சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் உள்ள மண் சாலையை தார் சாலை மற்றும் பாலம் கட்டி தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jayangondasozhapuram 11th Ward , Krishnarayapuram: Near Krishnarayapuram, Karur District, in the old Jeyangonda Cholapuram municipal area for about 60 years.
× RELATED கடலூரில் தேர்தலன்று இரு...