×

குடந்தையில் இன்று அதிகாலை பயங்கரம்; இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: எஸ்பி விசாரணை

திருவிடைமருதூர்: குடந்தையில் இன்று அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள்  பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (40).  இந்து முன்னணி மாநகர செயலாளர். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை இவரது  வீட்டு வாசலில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த சக்கரபாணி வெளியே ஓடி வந்து பார்த்தார். வாசலில் புகை மண்டலமாக இருந்தது. பெட்ரோல், மண்ணெண்ணெய் வாசனையும் அடித்தது. தகவலறிந்து தஞ்சை எஸ்பி ரவளிப்பிரியா, டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

சக்கரபாணியின் வீட்டு வாசலில் வெடித்து சிதறி கிடந்த 2 மது பாட்டில்களை கைப்பற்றினர். மேலும்  பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார், எதற்காக வீசினர், முன் விரோதமா அல்லது வேறு ஏதும் காரணமா என கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் நன்றாக எரிவதற்காக மது பாட்டிலில் பெட்ரோலும், மண்ணெண்ணையும் ஊற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. அதிகாலையில் நடந்த இச்சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Kudantai ,Hindu Front , Early morning terror in Kudantai; Petrol bomb hurled at Hindu Front executive's house: SP probe
× RELATED பூட்டிய வீட்டிற்குள் இந்து முன்னணி நிர்வாகி மனைவி மர்மச்சாவு