×

சிறுமழைக்கே குளமாகும் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு சொட்டு நீரும் பூமியில் சேமிப்பு

*ஆத்தூரில் பொதுமக்கள் மகிழ்ச்சி...அரசின் பணிகளுக்கு வரவேற்பு...

நிலக்கோட்டை : பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் குளமாகியிருந்த ஒருங்கிணைந்த ஆத்தூர் யூனியன் அலுவலக வளாகம் மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட நவீனத்துடன் புதுப்பொலிவு பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் யூனியன் அலுவலகம் செம்பட்டி பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது, இந்த அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி பொறியியல் பிரிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், அரசு சிமென்ட் குடோன் உள்ளிட்ட அலுவலகங்களுடன் ஒருங்கிணைந்த அலுவலக பகுதியாக இருக்கிறது.

இருப்பினும் இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதி தாழ்வானது என்பதுடன், இப்பகுதியில் பெய்யும் மழைநீரை சேமிக்க எந்தவித வடிகால் வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் சாதாரண மழைக்கே இந்த அலுவலக வளாகப் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கும். அத்துடன் தாழ்வான பகுதி என்பதால் சாலைகளில் ஓடும் மழைநீரும் அலுவலக பகுதிக்குள் வந்து சேரும்.

இதனால் இந்த அலுவலக வளாகத்தின் நுழைவாயில் முதல் அலுவலகத்தை சுற்றி மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பது வாடிக்கை. இதனால் அலுவலக பணியாளர்கள் முதல் பொதுமக்கள் வரை முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கிச்சென்று தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவலநில தொடர்ந்து வந்தது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் யூனியன் அலுவலக வளாகத்தில் குளம்போல் தேங்கும் மழை நீரால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து இப்பகுதிகளில் நோய் தொற்று பரப்பும் கூடாரமாகவும் மாறியது. இதனால் வளாகப் பகுதியில் செடிகள் அதிக அளவில் உருவானதால் இப்பகுதி முழுவதும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்து வந்தது.

இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் அப்பகுதி பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல்வேறு புகார்கள் தெரிவித்தும் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் முதல் யூனியன் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் வரை பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பிறப்பித்த உடனடி உத்தரவின் பேரில் ஒன்றியத்தலைவர் மகேஸ்வரி முருகேசன் முயற்சியில் கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவோடு அலுவலக வளாகத்தில் விழும் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி ஒவ்வொறு கட்டிடத்திற்கும் தனித்தனியே குழாய்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் அமைத்து, அங்குள்ள ஒவ்வொரு கட்டிடத்திற்கும் தனித்தனியாக என ஒட்டுமொத்தமாக எட்டு மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன.அத்துடன் ஆத்தூர் யூனியன் அலுவலக வளாகப்பகுதியில் முற்றிலும் மழைநீர் தேங்காத வகையிலும், சாலையில் ஓடும் மழைநீர் கூட அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் இருக்கும் வகையிலும் வடிகால்களுடன் தரைதளத்தை உயர்த்தி, ஒருங்கிணைந்த அலுவலக வளாக பகுதி முழுவதையும் சிமென்ட் தளமாக மாற்றி அமைத்து வருகின்றனர்.

இதனால் இத்தனை ஆண்டுகளாக மழை வெள்ளத்தில் நீந்துவதுபோல் பெரும் சிரமங்களுக்கு இடையே ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் சென்ற பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அந்த பிரச்னையில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனால் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமைச்சரின் உத்தரவில் தரமுடன் செய்யப்படும் இப்பணிகளை வெகுஜனங்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags : earth , Nilakottai: The combined Aathur Union office complex, which was a pond during the ten-year AIADMK rule, includes rainwater storage.
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...