அயனாவரம் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலருக்கு வளைகாப்பு

பெரம்பூர்:  அயனாவரம் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலருக்கு வளைகாப்பு நடந்தது. காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பல்வேறு பணிசுமை காரணமாக அடிக்கடி சொந்த ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. குறிப்பாக, பெண் காவலர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால், பெரும்பாலும் காவல் நிலையங்களில் தங்களது நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனர். அவ்வாறு, பணிபுரியும்  காவலர்களின் மன அழுத்தத்தை போக்க அடிக்கடி பல்வேறு நிகழ்ச்சிகளை காவல்துறை சார்பில் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அயனாவரம் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலர் ஒருவருக்கு நேற்று அந்த காவல் நிலையத்தில் வைத்து அயனாவரம் போலீசார் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். இதில், அயனாவரம் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் தலைமை பெண் காவலர் சௌமியா. இவர் தற்போது ஒன்பது மாத கர்ப்பமாக இருந்து வருகிறார். இவரது கணவர் சத்தியமூர்த்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது சொந்த ஊர் சேலம். பிரசவத்திற்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் தற்போது கணவன் மனைவி இருவரும் அயனாவரம் பகுதியில் குடியிருந்து வருகின்றனர்  ஒன்பது மாத கர்ப்பமாக உள்ள சவுமியாவிற்கு வளைகாப்பு செய்ய அயனாவரம் போலீசார் அனைவரும் முடிவெடுத்தனர்.  இதனை தொடர்ந்து, முறைப்படி நேற்று ஏழு வகையான சாதம் மற்றும் கணவன், மனைவி இருவரையும் அழைத்து நலங்கு வைத்து வளைகாப்பு நடத்தினர்.

அயனாவரம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைவரும் சௌமியா மற்றும் அவரது கணவர் இருவரையும் ஆசீர்வாதம் செய்தனர. அயனாவரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மேற்பார்வையில் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் அயனாவரம் காவல் நிலையத்தில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: