×

உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினம் பள்ளி மாணவ, மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி: போலீசார் ஏற்பாடு

பெரம்பூர்: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபடுவது வழக்கம். அந்த வகையில் புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட செம்பியம் ,திருவிக நகர், வியாசர்பாடி ஆகிய மூன்று காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட அரசு  பள்ளிகளில் பயிலும சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் செம்பியம் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், அவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது இதில், மாணவ, மாணவியர் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் என்ன உள்ளன. அந்த சட்டங்களின் மூலம் சிறார்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், போக்சோ வழக்குகள் என்றால் என்ன? அதனை எவ்வாறு காவல்துறையினர் கையாளுகின்றனர் என்பது குறித்தும் மாணவ, மாணவியருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதுதவிர, தனி மனித ஒழுக்கம், கல்வியின் முக்கியத்துவம், செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகள், குடும்பத்தில் மாணவ, மாணவியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், காவல்துறை அல்லாத பிற அமைப்புகள் எவ்வாறு சிறுவர், சிறுமிகளுக்கு உதவுகின்றன என்பது குறித்தும் அந்த அமைப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவ மாணவியர் கேள்விகளை கேட்டு போலீசாரிடம்  விளக்கம் பெற்றனர்.

பின்னர், இதுதொடர்பாக, கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவ,  மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்  இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன்.சதீஷ். அன்புகரசன். செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகா உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

Tags : Children ,Prevention ,Awareness , World Day for the Prevention of Violence against Children, Awareness program organized by police for school students
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...