×

தந்தை வேலை செய்யும் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி திடீர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

பல்லாவரம்: பல்லாவரம் ரயில் நிலையம் சென்ற பிளஸ் 2 மாணவி திடீரென மாயமானார். பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரம், எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு (56). இவரது மனைவி மேனகா (50). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். டில்லிபாபு சென்னை, பிராட்வே அடுத்த முத்தியால்பேட்டை அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இவரது மகள், அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தினமும் பல்லாவரத்தில் இருந்து தந்தையுடன் பள்ளிக்கு ரயிலில் சென்று வந்தார்.

இந்நிலையில், தற்போது பள்ளியில் தேர்வு நடந்து வருகிறது. இதனால் மாணவி மட்டும் தனியாக பிற்பகல் வேளையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 18-ம் தேதி ரயிலில் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி  பள்ளிக்கும் செல்லவில்லை. வீடும் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பள்ளி மாணவிகள் உறவினர்கள் வீடுகளில்  தேடினர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  விசாரணையில், மாணவி குறிப்பிட்ட ஒரு யூடியூப் சேனலை மட்டும் அதிகமாக பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த யூடியூப் சேனலை நடத்துபவரின் செல்போனில் மாணவி அடிக்கடி பேசியும் வந்துள்ளார். மேலும், அந்த நபரின் வீடு பள்ளிக்கரணையில் உள்ளது. இதனால், மாணவியை ஆசைவார்த்தை கூறி, கடத்திச் சென்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், யூடியூபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதிலும்  எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவி கடைசியாக பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து, அவரிடம் யார் யாரெல்லாம் கடைசியாக பேசினார் என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே காணாமல் போன தனது மகளை விரைந்து கண்டுபிடித்து தருமாறு முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : School where father works, plus 2 student suddenly fainted, police intensive investigation
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...