×

சாதி பஞ்சாயத்துக்களை ஜனநாயக அமைப்பு என்பதா? யு.ஜி.சி தலைவரை பதவி நீக்கம் செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26ம் தேதி இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ‘சிறந்த அரசன்’ ‘சாதி பஞ்சாயத்துகளும் அவற்றின் சனநாயக மரபுகளும்’ முதலான தலைப்புகளில் உரைகளை நிகழ்த்த ஏற்பாடு செய்யுமாறு மாநில ஆளுநர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்துக்கும் எதிரானதாகும். இந்த நிலையில் ‘காப்’ பஞ்சாயத்து என்னும் சட்ட விரோத வன்முறைக் கூட்டங்களை சனநாயக வடிவங்களாக சித்தரிப்பது வன்முறையையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் செயலாகும்.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்போக்கு பயங்கரவாதக் கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர் ஜெகதீஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26ம் தேதியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்குகளை நடத்துமாறும், யுஜிசி தலைவர் சொன்னதுபோல் பிற்போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமல் தடுக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் முதலமைச்சர்களை அவமதிக்கும் விதமாக நேரடியாக ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதியிருப்பது மாநிலங்களில் நிலவும் உயர்கல்விச் சூழலை சீர்குலைப்பதற்கு மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதனைத் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது.


Tags : Cadi Panchayatas ,U. GG Thirumavalavan ,CDC , Are caste panchayats a democratic system? Thirumavalavan insists on sacking UGC chief
× RELATED இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட...