×

அமைந்தகரை மேம்பால தடுப்பு சுவற்றில் பைக் மோதி மதுரை இன்ஜினியரிங் மாணவர் பலி: பிஇ மாணவர்கள் 2 பேர் கவலைக்கிடம்

அண்ணாநகர்: அமைந்தகரை மேம்பால, தடுப்பு சுவரில் பைக் மோதியதில் சென்னையில் இன்ஜினியரிங் படிக்கும் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், வேலூர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 2 இன்ஜினியரிங் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆலன் ஜெர்மான்ஸ்(21). வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தருண்குமார்(21) மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்தவர் பிரவின்குமார் (21). இவர்கள் 3 பேரும் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் 4ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்தநிலையில், கோவளம் கடற்கரையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக  மூவரும் ஒரே பைக்கில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்றனர். அமைந்தகரை  மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர்கள் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தனர்.  அதிகாலை நேரம் என்பதால், ஆட்கள் நடமாட்டமின்றி சுமார் அரை மணி நேரம் அவர்கள் தவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த விபத்தை பார்த்த சிலர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில்,  அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆலன் ஜெர்மான்ஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுசம்பந்தமாக அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai ,Samanthakarai , Nitakarai Flyover Block, Madurai Engineering Student, Concerned
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...