காஷ்மீரில் சண்டை தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் தீவிரவாதி கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்  மாவட்டத்தில் உள்ள செக்கி துாது பகுதியில் தீவிரவாதிகள் மறைந்து உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்த போலீசார், பாதுகாப்பு படையினர் சென்றனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் சஜத் தந்த்ரே என்ற தீவிரவாதி படுகாயமடைந்தான். அவனை உடனே பிஜிபெகராவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் கூறும்போது, ‘சஜத் தந்த்ரே தீவிரவாத செயல்களை நடத்தி விட்டு மீண்டும் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தான். முன்பு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியின் கூட்டாளியாக செயல்பட்டுள்ளான். பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சஜத், பின்னர் விடுதலை செய்யப்பட்டான். கடந்த 13ம் தேதி ரக்மோமன் என்ற இடத்தில்  வெளிமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தாக்குதலிலும் சஜத்துக்கு தொடர்பு உண்டு,’ என்றனர்.

Related Stories: