×

அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த நெல்லை மாவட்ட பாஜ தலைவர் உட்பட 3 பேர் கைது: டிச.2வரை சிறையில் அடைப்பு

நெல்லை: மாடுகளை  ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை பணி ெசய்யவிடாமல் தடுத்த வழக்கில் நெல்லை மாவட்ட பாஜ தலைவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நெல்லை  மாநகராட்சி   பாளை மண்டல பகுதியில் நேற்று முன்தினம் மாலை  போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள்  மற்றும் அதிகாரிகள் பிடித்து ஏலம் விட நடவடிக்கை எடுத்தனர். இதற்காக பிடிபட்ட மாடுகளை அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அலகு அலுவலகம் அருகே அடைத்து வைத்திருந்தனர்.

இதையறிந்த  மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் பாஜகவினர் அங்கு  திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், மாடுகளை ஏலத்தில் விடுவதை நிறுத்தி, அவைகளை திறந்து விடக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதில், பாஜ  வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனர். மாடுகள் அடைக்கப்பட்ட கேட்டை சேதப்படுத்தி மாடுகளை விடுவித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில், அதிகாரிகளை அரசு பணி செய்ய விடாமல்  தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், சட்டத்துக்கு விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்  கீழ் பாஜ மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட  பொதுச்செயலாளர் சுரேஷ், பாளை மண்டல துணை தலைவர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  பின்னர் மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட மூன்று பேரையும் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட் அசோக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை டிச.2ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Nellai district ,BJP , 3 people including Nellai district BJP president arrested for preventing officials from working: Imprisonment till December 2
× RELATED நெல்லை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து...