சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மண்டல தலைமை அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தை நாளை நடத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிஐடியு நிர்வாகி கூறியிருப்பதாவது: ஊதிய ஒப்பந்தம் இறுதியாகி 2 மாதங்கள் ஆன போதிலும், ஊதிய உயர்வைத் தவிர ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட சரத்துகள், பேச்சுவார்த்தையின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. மேலும் தனியார் மய நடவடிக்கை இல்லை என அமைச்சர் ஆணித் தரமாக சொன்னாலும், போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியே அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் விடுப்பு மறுக்கப்படுவதோடு, பணிக்கு வந்தாலும் சம்பளத்தை பிடித்தம் செய்கின்றனர். அதேபோல், கடந்த மே மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி மறுக்கப்படுகிறது. எனவே, இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, நாளை காலை 10 மணியளவில் அனைத்து மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதில் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
