×

சத்தியமங்கலம் அருகே மாஜி எம்எல்ஏ கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

சத்தியமங்கலம்: மாஜி எம்எல்ஏ கடத்தல் வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (46). இவர் 2016-21ல் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி இவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று அடித்து ரூ.1.50 கோடி பறித்து சென்றனர். இது குறித்து மாஜி எம்எல்ஏ ஈஸ்வரன் அளித்த புகாரின்பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக உக்கரம் பகுதியை சேர்ந்த கர்ணன் (42), கோவை மாவட்டம் அன்னூர் தர்மலிங்கம் (47), சத்தியமங்கலம் சீனிவாசன் (49), தொண்டாமுத்தூர்  பிரைட்பால் (40), திருப்பூர் மாவட்டம் அவினாசி  கண்ணன் (45) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் நேரு நகரை சேர்ந்த மிலிட்டரி சரவணன்  கடந்த அக்டோபர் 6ம் தேதி வீட்டின் அருகே முட்புதர் காட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து மிலிட்டரி சரவணன் மீண்டும் தலைமறைவானார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததால் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை நாடியபோது, கோர்ட்டில் சரணடையுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து மிலிட்டரி சரவணன் ஈரோடு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Saran ,MLA ,Sathyamangalam , Sathyamangalam, ex-MLA kidnapping case in court
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்