×

சமூகவலைத்தளங்களில் பொய் தகவல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கோவை: ஆதார் எண் இணைக்காவிட்டால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது தவறான பிரசாரம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நேற்று அளித்த பேட்டி: தமிழக மின்துறையில் இதற்கு முன்பு 1  கோடியே 15 லட்சம் தரவுகள் மட்டுமே இருந்தது. தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட  மின் நுகர்வோரின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம்  உற்பத்தி, தனியார் கொள்முதல் மற்றும் மின் விநியோக அளவு, கட்டண அளவு  உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மின்துறையை  மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக,  மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இது, நிர்வாக ரீதியில் நடந்துவரும் ஒரு செயல். இது, ரெகுலர் பணி. இதற்கும் இலவச மின்சார விநியோகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. விவசாயிகளுக்கு, விசைத்தறி நெசவாளர்களுக்கு, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் எப்போதும்போல் தொடர்ந்து வழங்கப்படும்.

ஆதார் எண், இணைத்தால்தான் இலவச மின்சாரம் வழங்கப்படும் என சிலர் பொய்யான தகவல்களை, சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகிறார்கள். இதை, யாரும் நம்ப வேண்டாம். இலவச மின்சாரம் ரத்து செய்யப்படமாட்டாது. கடந்த ஆட்சியில் இருந்ததுபோல் தற்போது மழைக்காலத்தில் மின்வெட்டு இல்லை.

தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. அதிமுக ஆட்சியின்போது கிடப்பில் போடப்பட்ட விண்ணப்பங்களுக்கும் தற்போது இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் இப்பணி வேகம் எடுத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Tags : Minister ,Senthil Balaji , False information on social media, Minister Senthil Balaji assures farmers of free electricity
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...