2 ஆண்டுகளாக கோளாறு மேல் கோளாறு ஓடாத விமானங்களை தந்து நேபாளத்தை ஏமாற்றிய சீனா: வேறு வழியில்லாமல் விற்க முடிவு

காத்மாண்டு: சீனாவிடம் இருந்து அதிக விலை கொடுத்து நேபாளம் வாங்கிய 5 விமானங்கள் 2 ஆண்டாக கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் வேறு வழியில்லாத நேபாள அரசு 5 சீன விமானத்தையும் விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மட்டகரமான மலிவு விலை பொருட்களுக்கு உலக அளவில் பிரசித்தி பெற்ற நாடு சீனா. இந்நிலையில், சீனாவின் மோசமான தயாரிப்புகளுக்கு இன்னொரு உதாரணத்தை நேபாள நாடு வெளிப்படுத்தி உள்ளது.

நேபாள அரசுக்கு சொந்தமான நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் 17 இருக்கைகள் கொண்ட 2 ஒய்12இ விமானங்களையும், 54 இருக்கைகள் கொண்ட 2 எம்ஏ60 விமானத்தையும் சீனாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, முதற்கட்ட விமானங்களை கடந்த 2014ல் சீனா ஒப்படைத்தது. இந்த விமானங்கள் வாங்கிய சில ஆண்டுகள் மட்டுமே நல்லபடியாக செயல்பட்டுள்ளது.

அதன்பின் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறால் விமானத்தை இயக்க முடியவில்லை. உச்சகட்டமாக கடந்த 2 ஆண்டாக இந்த 5 விமானங்கள் இயக்கப்படாமல் வெறுமனே காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமானத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விமானத்தை வாங்கியதில் நேபாள அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த விமானத்தை ஒரு நிறுவனம் கூட விமானத்தை குத்தகைக்கு எடுக்க முன்வரவில்லை. இதனால் வெறுத்துப் போன நேபாள அரசு இப்போது 5 விமானத்தையும் விற்கும் முடிவுக்கு வந்து விட்டது.

இப்படித்தான் கடன் வலையில் வீழ்த்துகிறது

நேபாள அரசுடன் சீனா ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. இமயமலை வழியாக திபெத்தின் கெருங் நகரில் இருந்து காத்மாண்டை இணைக்கும் ரயில் வழித்தடத்தையும் சீன நிறுவனம் அமைக்கிறது. நேபாளத்தின் பல ரயில் வழித்தடங்களை அமைக்கும் பணியை சீன நிறுவனங்களே டெண்டர் எடுத்து செய்கின்றன. இத்தகைய ரயில் வழித்தடங்கள் மூலம் நாட்டின் சுற்றுலா துறை வளர்ச்சி காணும் என நேபாளம் கனவு காண்கிறது. இதற்காக சீன அரசிடம் இருந்து பல கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது. நேபாளம் போன்ற சிறிய அண்டை நாடுகள் எவ்வளவு கடன் கேட்டாலும் சீன அரசு தயங்காமல் தருகிறது. இறுதியில், சீனாவின் கடன் வலையிலும் சிக்கிக் கொள்கின்றன.

Related Stories: