×

2வது டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா: சூரியகுமார் அதிரடி சதம்

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்தியா 65 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வெலிங்டனில் நடக்க இருந்த முதல் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டி பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச... இஷான் - பன்ட் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர்.

பன்ட் 6 ரன்னில் வெளியேற, அடுத்து இஷானுடன் சூரியகுமார் ஜோடி சேர்ந்தார். இஷான் 36 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சோதி பந்துவீச்சில் சவுத்தீ வசம் பிடிபட்டார். ஷ்ரேயாஸ் 13 ரன் எடுத்து ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சூரியகுமாருடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்தார். ஹர்திக் ஒரு முனையில் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, சூரியகுமார் பவுண்டரியும் சிக்சரும்மாக விளாசித் தள்ளி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.

32 பந்தில் அரை சதம் கடந்த அவர், அதன் பிறகு ருத்ரதாண்டவமாடி 49 பந்தில் சதம் அடித்து மிரட்டினார். கடைசி ஓவரில் ஹர்திக் (13 ரன்), தீபக் ஹூடா (0), வாஷிங்டன் சுந்தர் (0) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, சவுத்தீ ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தினார். இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. சூரியகுமார் 111 ரன் (51 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்), புவனேஷ்வர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 3, பெர்குசன் 2, சோதி 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 18.5 ஓவரில் 126 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 61 ரன் (52 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கான்வே 25, பிலிப்ஸ் 12, டேரில் மிட்சில் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹூடா வீசிய 19வது ஓவரில் சோதி (1), சவுத்தீ (0), மில்னே (6) விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஹூடா 2.5 ஓவரில் 10 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். சிராஜ், சாஹல் தலா 2, புவனேஷ்வர், வாஷிங்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சூரியகுமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் நாளை நடக்கிறது.

Tags : India ,New Zealand ,Suryakumar , T20 tournament, India defeated New Zealand, Suryakumar hit century
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்