×

சிறுமிகளை பள்ளிக்குள் அனுமதிக்காத விவகாரம்; தலைமையாசிரியை, ஆசிரியை சஸ்பெண்ட்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி

திருவாடானை: திருவாடானை அருகே 2 சிறுமிகளை பள்ளிக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் தலைமையாசிரியை, ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடம்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை பகவதி என்பவர், கடந்த 6 மாதமாக சரிவர பள்ளிக்கு வராததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மாவட்ட கல்வித்துறைக்கு பல்வேறு புகார்களை அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கடம்பாகுடி அரசுப் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

அப்போது பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 2 சகோதரிகளின் தாய் முருகேஸ்வரி, தலைமையாசிரியை மீதான புகார்களை எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியை பகவதி, கடந்த 17ம் தேதி 2 சிறுமிகளையும் பள்ளிக்கு அனுமதிக்க மறுத்து வீட்டிற்கு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக சிறுமிகளின் தாய் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நவ.18ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது.

சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாடானை போலீசாரும், வட்டாரக் கல்வி அலுவலர் வசந்த பாரதியும் அந்தப் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில் தலைமையாசிரியை பகவதி மற்றும் உதவி ஆசிரியை கண்ணகி ஆகிய 2 ஆசிரியைகளையும் மாவட்டக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : The issue of not allowing girls to enter school; Headmistress, teacher suspended: District Education Officer action
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை