×

மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் குரூப் 1 தேர்வை 42,363 பேர் எழுதினர்; 18,983 பேர் ஆப்சென்ட்

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை 42,363 பேர் எழுதினர். 18,983 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
துணை கலெக்டர், டிஎஸ்பி, உதவி கமிஷனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 92 பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 65 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. விண்ணப்பதாரர்கள் அதிகாலை முதலே தேர்வு மையத்துக்கு வந்தனர். பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, மையத்துக்குள் தேர்வர்களை அனுமதித்தனர்.

வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 175 வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலும், 25 வினாக்கள் எஸ்எஸ்எல்சி. தரத்திலும் இருந்தன. மதுரை மாவட்டத்தில் இந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கு 20,259 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்றைய தேர்வை 12,276 பேர் எழுதினர். 7,983 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதுரையின் 65 தேர்வு மையங்களிலும் 65 ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டனர். துணை தாசில்தார் தலைமையில் 18 மொபைல் குழுவினர், துணை கலெக்டர் தலைமையில் 5 பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் ஏதும் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், 66 வீடியோகிராபர்கள் வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இத்தேர்வு பகல் 12.30 மணி வரை நடந்தது. நேற்று சனிக்கிழமை முழு வேலை நாள் என அரசு அறிவித்திருந்த நிலையில், தேர்வு நடந்த மையங்களில், பகல் 12.30 மணிக்கு பிறகு பள்ளிகள் நடத்தப்பட்டன. இத்தேர்வு மட்டுமின்றி, நேற்று பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கான பருவ இடைநிலை தேர்வுகளும் நடத்தப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 மையங்களில் நேற்று நடந்த தேர்வில் 3,724 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 2,276 பேர் ஆப்சென்ட் ஆகினர். சிவகங்கை மாவட்டத்தில் 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்க 4,317 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,562 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1755 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்விற்காக 28 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் தேர்வு எழுத மொத்தம் 8,634 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 5,994 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2,640 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேனி மாவட்டத்தில், 22 மையங்களில் நேற்று தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு தேனி மாவட்டத்தில் தேர்வு எழுத 6,070 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இத்தேர்வினை கண்காணித்திட 22 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 305 அறைக்கண்காணிப்பாளர்கள், 9 இயக்க குழுக்கள், துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் கொண்ட 3 பறக்கும் படை மற்றும் போலீசார் உள்ளிட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று நடந்த தேர்வினை 3,687 பேர் எழுதினர். 2,393 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். விருதுநகர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு 40 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு எழுத  மாவட்டம் முழுவதும் 10,349 பேர் விண்ணப்பித்திருந்தனர். 6,137 பேர் தேர்வினை எழுதினர். 4,212 பேர் தேர்வெழுதாமல் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். 59 சதவீதம் பேர் தேர்வெழுதிய நிலையில் 41 சதவீதம் பேர் தேர்வெழுதவில்லை.



Tags : Madurai ,Theni ,Dindigul , In 6 districts including Madurai, Theni and Dindigul, 42,363 people wrote the Group 1 examination; 18,983 people are absent
× RELATED எலுமிச்சை பழம் ₹8க்கு விற்பனை