மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய தின விழா: பழங்கால கோயில்கள் புகைப்பட கண்காட்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில்  உலக பாரம்பரிய தின விழாவை முன்னிட்டு, பழங்கால கோயில்கள் புகைப்பட கண்காட்சியை   உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் துவக்கிவைத்தார். கண்காட்சி 25ம்தேதி வரை  நடக்கிறது. உலகம் முழுவதும் நவம்பர் 19ம்தேதி முதல் 25ம்தேதி வரை பாரம்பரிய தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 19ம்தேதி ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி புராதன சின்னங்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்களை அனுமதிப்பது, பாரம்பரியத்தை பறைசாற்றும் புத்தகங்கள், தபால் தலை, முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச்சொல்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அந்தவகையில், மாமல்லபுரம் தொல்லியல் துறை சார்பில், கடற்கரை கோயில் வளாகம் முன்பு பழங்கால கோயில்கள், கல்வெட்டுகள், கீழடி தொல்பொருட்கள் கண்காட்சி திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு, முற்கால சோழர் கோயில்கள், இடைக்கால சோழர் கோயில்கள், கோயில் புனரமைப்பு பணிகளின் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். வரும் 25ம்தேதி வரை கண்காட்சியை இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில், தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சையது இஸ்மாயில், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ரகு, சுற்றுலா துணை அலுவலர் கார்த்திக், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உட்பட பலர் கலந்துகொண்டனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Related Stories: