×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஒருவர் கைது; பெண் உள்பட 2 பேருக்கு வலை

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுசம்பந்தமாக பெண் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டுபேர் ஐம்பொன் சிலைகளை வைத்துக்கொண்டு விற்பனை செய்வது பற்றி பேசிகொண்டிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் உமாமகேஷ்வரி தலைமையில் போலீசார் விரைந்தனர். பின்னர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை  மடக்கி போலீசார் பிடிக்க சென்றபோது தப்பியோடினர். இதில், ஒருவர் போலீசார் பிடியில் சிக்கினார். பின்னர் அந்த நபர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் 1 1/2 கிலோ எடை கொண்ட  முக்கால் அடி உயரம் ஐம்பொன் பொன்மணி விளக்கு ஏந்திய சிலையும் 300 கிராம் எடை கொண்ட 3 அங்குலம் உயரம் கொண்ட சிறிய பெருமாள் சிலையும் இருந்தது.

அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது கும்பகோணத்தை சேர்ந்த சுதாகர்(32), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் என்று தெரிந்தது. தப்பியோடியது அவரது கூட்டாளியான தினேஷ்(30) என்பதும் தெரியவந்தது. போலீசாரிடம் சுதாகர் கூறும்போது, ‘’திருச்சி, லால்குடியை சேர்ந்த பெண்மணி ஒருவர் தப்பி சென்ற தினேஷ் என்பவருக்கு நண்பர். அவர்தான் தினேஷிடம் இரண்டு சிலைகளையும் கொடுத்து அனுப்பினார். அவர்களிடம் பழைய இரண்டு ருபாய் நோட்டும் ஒரு துண்டு சீட்டும் இருந்துள்ளது. அதை சென்னையில் வரும் நபரிடம் காண்பித்தால் ரூ.3 லட்சம் கொடுப்பார் என்றும் அதை வாங்கி வரும்படி கூறினார்.

தினேஷை கைது செய்தால் பல உண்மைகள் வெளியே வரும். நான் கூலி வேலை செய்து வருகிறேன். அதிகம் பணம் தருவேன் என்று தினேஷ் கூறியதால் அதற்கு ஆசைப்பட்டு கூட வந்தேன். ஐம்பொன் சிலைகளை கொடுத்தவர் யார் என்று எனக்கு தெரியாது’ என்றார். போலீசார் கூறுகையில் ‘ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்ய கொடுத்து அனுப்பிய பெண் யார் என்றும் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி தினேஷ் ஆகிய இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சசுதாகரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனில் யார், யாரிடம் பேசியுள்ளார் என்றும் தீவிர விசாரணை செய்துவருகிறோம். விரைவில் ஐம்பொன் சிலை வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை கைது செய்து விடுவோம்’ என்றனர். சிலைகள் கைமாற்றப்படுவதற்கு அடையாளமாக பழைய இரண்டு ரூபாய் நோட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Aimbon ,Koyambedu , Rescue of Aimbon idols at Koyambedu bus stand: One arrested; Net for 2 including female
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...