×

டெல்டா மாவட்டத்தில் 136 மையங்களில் 25 ஆயிரம் பேர் குரூப் 1 முதல்நிலை தேர்வு எழுதினர்

திருச்சி: தமிழகத்தில் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 92 பதவிகளுக்கு குரூப் 1 முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. டெல்டா மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாட்ச், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டு இருந்தது.

முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நேற்று நாகையில் 3 மையங்களில் 3026 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். 1118 பேர் தேர்வெழுதினர். 857 பேர் தேர்வெழுத வரவில்லை. மயிலாடுதுறையில் 10 மையங்களில் 2,805 பேர் தேர்வெழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் பார்வையற்றோர் 2 பேர் உள்பட மொத்தம் 1768 பேர் தேர்வெழுதினர், 1037 பேர் தேர்வெழுத வரவில்லை.

திருவாரூரில் 5 தேர்வு மையங்களில் தேர்வெழுத 3506 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2121 பேர் தேர்வெழுதினர். 1385 பேர் தேர்வெழுத வரவில்லை. தஞ்சையில் 8,312 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5075 பேர் 29 மையங்களில் தேர்வெழுதினர். கரூரில் 4168 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். 2508 பேர் 17 மையங்களில் தேர்வெழுதினர். 1660 பேர் தேர்வெழுத வரவில்லை. புதுக்கோட்டையில் 6212 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 தேர்வு மையங்களில் 4025 பேர் தேர்வெழுதினர். 2187 பேர் தேர்வெழுத வரவில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் 3,406 பேர் தேர்வெழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 2228 பேர் தேர்வெழுதினர். 1178 பேர் தேர்வெழுத வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 11 மையங்களில் 3,277 பேர் தேர்வெழுத விண்ணப்பம் செய்திருந்தனர். 2121 பேர் தேர்வெழுதினர். 1156 பேர் தேர்வெழுத வரவில்லை. திருச்சியில் 44 மையங்களில் 13,613 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 8,097 பேர் தேர்வெழுதினர். 6,516 பேர் எழுதவில்லை. டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 25, 036 பேர் எழுதினர். காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கியது.

பொதுப்பாட பிரிவில் 175 வினாக்கள், திறனறிவு பிரிவில் 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கே தேர்வு எழுதும் இளைஞர்கள், பெண்கள் தேர்வு மையங்களில் குவிந்தனர். அவர்களுக்கு ெதர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. மேலும் ெசல்போன், வாட்ச், மோதிரம் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டது. இவற்றை கழற்றி வாங்கிக்கொண்ட பின், தேர்வு அறைகளுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9.30 மணிக்கு துவங்கிய தேர்வை, மாவட்டங்களில் துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அலுவலர்கள், இயங்கு குழுக்கள் மற்றும் உதவியாளர் நிலையில் ஆய்வு அலுவலர்கள் கண்காணித்தனர். மேலும், தேர்வு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைத்து மையங்களிலும் தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. பின்னர் விடைத்தாள் கட்டப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.



Tags : Delta district , 25,000 people appeared for the Group 1 primary examination in 136 centers in Delta district
× RELATED அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...