×

கொடைக்கானலில் சூரியனை சுற்றி திடீர் ஒளி வட்டம்; வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விளக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று காலை வானில் சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது. இந்நிகழ்வை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை சூரியனை சுற்றி ஒளி வட்டம் தென்பட்டது. சில மணி நேரங்கள் மட்டுமே இந்த ஒளிவட்ட நிகழ்வை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். இதுகுறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘சூரியனையோ அல்லது நிலவை சுற்றியோ தென்படும் பிரகாசமான ஒளி வளையத்தை 22 டிகிரி சூரிய ஒளிவட்டம் என்று கூறுகிறோம். இது பெரும்பாலும் முற்பகல் பொழுதில் காணப்படும்.

இவற்றில் ஒளி சிதறலின் - ஒளி அடர்த்தி தன்மையை பொறுத்து பிரதான மற்றும் துணை வட்டங்கள் தோன்றும்.
பூமி வளிமண்டலத்தின் உயர்ந்த மேற்பரப்பில் உருவாகின்ற மெல்லிய மேகங்கள் சிற்றஸ் எனப்படுகிறது. சில சமயங்களில் இவற்றில் 20 மைக்ரான் அளவுக்கும் குறைவான நுண்ணிய பனித்துகள்களால் சூரிய கதிர்கள் ஒளிச்சிதறல் அடைகின்றன. பனித்துளிகளால் ஏற்படும் ஒளிச்சிதறல்கள் தான் ஒளிவட்டம் உருவாக காரணமாகும். இதன் முழுவட்ட பரிமாணம் 44 டிகிரி அளவில் இருக்கும். ஆனால் ஒளிவட்டத்தின் ஆர அளவை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் இது 22 டிகிரி சூரிய ஒளிவட்டம் என்று அழைக்கப்படுகிறது’’என்றனர்.



Tags : Kodaikanal , A sudden circle of light around the sun at Kodaikanal; Description of Astronomical Research Station scientists
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்