கீழடி அகழாய்வு முடிவுகள் மூலம் தமிழர்களுக்கு தனி எழுத்து முறை இருந்தது நிரூபணம்; அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

மதுரை: தமிழர்களுக்கு என்று தனி எழுத்துமுறை இருந்துள்ளதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிரூபிக்கின்றன என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஒருங்கிணைந்து, உலக மரபு வார விழாவை முன்னிட்டு நடத்திய தமிழக நடுகல் மரபு கண்காட்சி மதுரை திருமலை நாயக்கர் மகாலில் நேற்று நடந்தது.

தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை, தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ் சமுதாயத்தின் வரலாறும், பண்பாடும் உற்று நோக்கினால் பழைய கற்காலத்தில் துவங்கி, ஆரம்பித்து இரும்பு காலமாக இருந்தாலும், வரலாற்றின் தொடக்கக்காலமாக இருந்தாலும், சங்க காலமாக இருந்தாலும், இன்று வரை ஒரு மனித இனம் எல்லாவிதமான நாகரீக வளர்ச்சிகளையும் பெற்றிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தன்னுடைய பண்பாட்டினை பெற்று நிலையாக இருக்கிறது என்று சொன்னால் அந்த பெருமை நம் தமிழ் சமூதாயத்திற்கும், தமிழ் இனத்திற்கும் தமிழகத்திற்கும்தான் உண்டு என்பதை மறந்து விடக்கூடக்கூடாது. தற்போது தமிழகமெங்கும் நடக்கும் அகழ்வாய்வுகள் பல புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் பயனை அறிந்த சமுதாயம் தமிழ் சமுதாயமாக இருக்கிறது என்பதற்கு தொல்லியல் துறை சார்பில் மயிலாடும்பாறையில் நடந்த ஆய்வு முடிவுகள் திட்டவட்டமான தகவல்களை தந்துள்ளது. சங்க காலத்தில் நடுகல் மரபு இருக்கிறது என்பதை சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர். கீழடி ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான் தமிழர்களுக்கு என்று தனியான எழுத்து முறை இருந்தது என்பதை, 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழனுக்கு ஆற்றல் இருப்பதை நிரூபிக்கக்கூடிய ஆய்வுகள் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை தெற்குத்தொகுதி எம்எல்ஏ புதூர் பூமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: