×

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் தடை: ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர்: பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை (21-ந் தேதி) முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருகிற 23-ந் தேதி கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை (21-ந் தேதி) முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனாலும், தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை ஆகிய ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோவிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தர்கள் வர வேண்டாம். அதேநேரம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை பூஜைகள் வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sadhuragiri temple , 4 days ban for devotees to visit Chathuragiri temple due to heavy rain warning: Collector's notice
× RELATED சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 6 நாட்களுக்கு அனுமதி..!!