×

ரூ.1 கோடியில் நடைபெற்று வருகிறது மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருப்பணிகள்; டிசம்பரில் முடியும் கருவறை கூரை உயரம் ஒன்றரை அடி அதிகரிக்கப்படுகிறது

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் திருப்பணிகள் டிசம்பர் மாதம் நிறைவு பெறும், உயரம் ஒன்றரை அடி அதிகரிக்கும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கருவறையில் இருக்கும் மண் புற்றே பகவதியாகும். இது ஒவ்வொரு நாளும் வளருகிறது என்ற நம்பிக்கை உண்டு. இதனால் சந்தன காப்பு செய்து அம்மனை வடக்கு நோக்கி ஸ்தாபித்த பின்னர் வளர்ச்சி நின்றது என்கின்றனர். தற்போது சுமார் 15 அடி உயரம் கொண்ட பகவதி ஐந்து திருமுகங்களை கொண்டவராக விளங்குகிறார். 1909ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 30 முதல் 40 துலாம் அரைத்த சந்தனம் பூசப்படுகிறது. வடக்கு திருமுகம் வெள்ளியால் செய்யப்பட்டது. வெள்ளி மகுடம் உண்டு. அர்ச்சனா படிமமும், விழா படிமமும் கருவறையில் உள்ளன. இக்கோயிலின் பரிவார தெய்வங்கள், பிரசன்ன விநாயகர், கடல் நாகர், பைரவர் (சித்தர்) ஆகியோர் உள்ளனர். பைரவர் எனப்படும் சித்தர் சமாதி கோயில் பாட்டுச்சாவடியை ஒட்டி மேற்குபுறம் அமைந்துள்ளது. இதன் தல விருட்சம் வேப்பமரம். கருவறைக்கு தெற்கே விநாயகர் கோயில் இடம்பெற்றுள்ளது. கோயிலின் வடமேற்கில் நாகர் சிலை உள்ளது. இது மண்டைக்காடு கடலில் இருந்து எடுத்து 1979ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோயிலில் தினமும் காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, பகல் 12.30க்கு உச்சகால பூஜை, மாலை 6.30க்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியன நடைபெறுகிறது. வார செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் பூஜையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளம் பக்தர்கள் வருகை தருகின்றனர். மாத பவுர்ணமிகளில் சித்திரை மாத பவுர்ணமி பூஜை, பங்குனி மாத பரணி பூஜை, ஆவணி மாத அஸ்வதி நட்சத்திர பொங்காலை விழா ஆகியன சிறப்பு வாய்ந்தது. ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் தேவி பல்லக்கில் பவனி வருவது வழக்கம். கார்த்திகை மாதத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா கொடை விழா என்று அழைக்கப்படுகிறது. இதில் திதி, நட்சத்திரம் ஏதும் கணக்கிடுவதில்லை. 6ம் நாள் விழாவில் வலியபடுக்கை என்ற மகா பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். இந்த பூஜையில் திரளி, கொழுக்கட்டை, அவல், பொரி, முந்திரி, கற்கண்டு, 13 வகை வாழைப்பழங்கள், இளநீர், பிற பழவகைகள் ஆகியன அம்மனுக்கு முன்பு குவியலாக படைக்கப்பட்டு அவற்றின் மீது தீப்பந்தங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். 10ம் நாள் ஒடுக்கு பூஜை நடைபெறும். இதில் சாஸ்தா கோயிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உட்பட 11 வகை காய்கறி கூட்டு, குழம்புகள், சாதம் ஆகியவற்றை தலையில் சுமந்துவந்து கோயிலின் கருவறையில் வைப்பார்கள். இரவு 1 மணிக்கு பூஜை நடைபெறும்.

இதனை சுமந்து வருகின்றவர்கள் வாய் கட்டப்பட்டு இருக்கும். பானைகள் மீது வெள்ளை துணி போர்த்தி எடுத்து வருவர்கள். இந்த  ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியால் சமைக்கப்படுவது விசேஷம். இவை மரபு வழியில் கடைபிடிக்கப்படுகிறது. விழா முடிந்த 8 வது நாள் எட்டாம் ெகாடை விழா நடக்கும்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி புதன்கிழமை காலையில் கோயில் கருவறை மேற்கூரையில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் கோயில் மேற்கூரை முற்றிலும் எரிந்து நாசமானது. தொடர்ந்து தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. இதில் ஆகம விதிகள் மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நவம்பர் மாதம் 24ம் தேதி கோயிலில் ரூ.1 கோடி 8 லட்சம் மதிப்பில் திருப்பணிகளை தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் தொடக்கி வைத்திருந்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் 8ம் தேதி கோயிலில் குரு சன்னதியில் பரிகார பூஜையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் திருக்கோயிலின் மூலஸ்தான் மேற்கூரை சிதிலமடைந்ததை மாற்றி பழமை மாறாமல் புதுப்பித்தல் பணிகள் ரூ.95 லட்சம் மதிப்பீட்டிலும், கருவறை மர சீலிங் மற்றும் மர அலங்கார வேலைப்பாடுகள் சீரமைத்தல் ரூ.5.50 லட்சத்திலும், திருக்கோயில் கருவறை சுற்றுப்பிரகார உட்பகுதியில் கருங்கல் தளம் அமைத்தல் ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டிலும், திருக்கோயில் சுற்றுப்பிரகார மண்டபம் தள ஓடு சீரமைத்தல் பணி ரூ.2.77 லட்சத்திலும், கருவறை ‘பயர் புரூப் கேபிள் சர்க்யூட்’ அமைத்தல் பணி ரூ.0.90 லட்சத்திலும் என்று ரூ.1 கோடி 8 லட்சத்து 35 ஆயிரத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பொதுநல நிதியில் இருந்து மொத்தம் ரூ.96.78 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.  கன்னியாகுமரி மாவட்ட மர சிற்ப தொழில் கூட்டுறவு சங்கத்தினர் மரம் சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறுகையில், ‘மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திருப்பணிகளில் மர வேலைப்பாடு பணிகள் அனைத்தும் மண்டைக்காடு தேவசம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

கோயில் கருவறை மீது பலகையில் சீலிங் அமைக்கப்பட்டிருந்தது. அதனை போன்று மீண்டும் அமைக்கப்படும். கூரை ஏற்கனவே இருந்ததை விட ஒன்றரை அடி உயரம் அதிகரிக்கப்படுகிறது. கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் பழமை மாறாமல் உயரம் மட்டும் அதிகரிக்கப்படுகிறது. இதற்காக உத்திர கல்கள் 27 தயார் செய்யப்பட்டுள்ளது. உத்திர பணிகள் முடிந்துள்ள நிலையில் உத்திர கற்கள் தூண்களின் மீது புதியதாக வைக்கப்படும். இதன் உயரம் ஒன்றரை அடியாகும். உத்திரம் ஏற்கனவே நேரடியாக கல்தூண்களில் மீது வைக்கப்பட்டிருந்தது. தற்போது கல்தூண்களின் மீது உத்திர கல் வைக்கப்பட்டு அதன் மீது மர உத்திரம் வைக்கப்படுகிறது. அதன் மீது 72 சட்டங்கள் கூரை பகுதியில் வருகிறது. மூன்று பக்கம் சரிவுடன் கூரை அமையும், முன்பக்கம் இரண்டு பிரிவாக இருக்கும். உத்திரம் அனைத்தும் ஒருங்கிணைத்து கருவறை கூரையாக வடிவமைக்கும் பணிகள் தேவசம் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ,  அவற்றை பிரித்து  கோயிலில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே அயனி, பலா, மருது போன்ற மரங்கள் பயன்படுத்தப்படிருந்தது. தற்போது தேக்கு மரங்கள் மட்டுமே மர பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் பணிகள் அனைத்தையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Mandaikkadu ,Bhagavatiyamman , Mandaikkadu Bhagavatiyamman temple renovation work is underway at a cost of Rs.1 crore; By the end of December, the sanctum ceiling height is increased by one and a half feet
× RELATED கொடைரோடு அருகே காளியம்மன்,...