×

கலசப்பாக்கம் அருகே 4560 அடி உயரம் உள்ள பர்வதமலை கோயிலுக்கு செல்ல இனி ஆதார் அவசியம்; சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்கள் கண்காணிப்பு

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த 4560 அடி உயரமுள்ள பர்வதமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பர்வதமலைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா என பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் வந்து மலையேறி தங்கள் கைகளாலேயே தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலையேறி சென்று நீண்டநேரம் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா என்பதையும், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்கிறார்களா என்பதையும் வனத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் பரிசோதனை செய்து அனுப்பி வைக்கின்றனர். அதோடு பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு மஞ்சள் பைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பவுர்ணமி தினத்தன்று பர்வத மலையடிவாரத்தில் பக்தர்களை சோதனையிட்ட போது அவர்கள் பைகளில் போதை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களை கண்டித்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டும், டிசம்பர் 6ம் தேதி தீப விழாவை முன்னிட்டும் பக்தர்கள் வருகை தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தடைகாலமான 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்த ஆண்டு மகாதீப நாளில் வழக்கத்தைவிட அதிகரிக்கும் என்பதாலும் கோயிலின் புனிதம் காக்க கடந்த இரண்டு நாட்களாக ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மலையடிவாரத்தில் பக்தர்களை பரிசோதனை செய்த பின்னரே மலை மீது அனுப்பி வைக்கின்றனர்.

அத்துடன் மலையடிவாரத்தில் இருந்து உச்சி வரை காவல்துறை சார்பில் 8 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
அதேபோல் மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு முழு நேரமும் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 6ம் தேதி மகா தீபம் என்பதால் விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Aadhaar ,Parvathamalai temple ,Kalasapakkam , Aadhaar is now required to visit the 4560 feet Parvathamalai temple near Kalasapakkam; Monitoring of devotees through CCTV cameras
× RELATED லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம்...