×

ஆற்காடு பகுதியில் தேங்காய் ஒரு டன்னுக்கு ரூ.6ஆயிரம் வரை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் தேங்காய் ஒரு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 வீடு மற்றும் ஓட்டல்களில் உணவு சமைப்பதற்கும், ஆன்மிக செயல்பாடுகளுக்கும் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சைவ உணவு செய்வதற்கும், அசைவ உணவு செய்வதற்கும் தேங்காய் முக்கிய பங்காற்றுகிறது. திருமண விழாக்கள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் வேறு பல நிகழ்ச்சிகளுக்கும் தேங்காயின் பங்கு முக்கியமானது. மேலும் உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலும் தேங்காய் போற்றப்படுகிறது. புதிதாக எந்த ஒரு பொருளை வாங்கும் போதும் அதற்கு பூஜை செய்யவும், திருஷ்டி சுற்றி உடைக்கவும், கோயில்களிலும், திருவிழா நாட்களிலும் தேங்காய் மிகவும் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல், பல்வேறு மருத்துவத்திற்கு தேங்காய் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு சினிமாவில் தேங்காய் விலை அதிகமாக இருந்ததால் அதை வாங்க முடியாமல் காமெடி நடிகர் கவுண்டமணி தேங்காயில் பாம் உள்ளதாக புரளி கிளப்பி விட அதனால்  ஏற்படும்  களேபரங்கள் எப்போதும் நகைச்சுவையை வரவழைக்கும். தமிழ்நாட்டில் பொள்ளாச்சி தேங்காய்க்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதிகளில் உள்ள கடைகளில் பொள்ளாச்சி, காவேரிப்பட்டணம், சூளகிரி ஆகிய பகுதிகளிலிருந்து தேங்காய் டன் கணக்கில் வர வழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரே சீராக தேங்காய் விலை இருந்தது. ஒரு டன் ரூ.22 ஆயிரத்திலிருந்து ரூ.23 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருப்பதால் அவர்களுக்கு தேங்காய் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் மழையின் காரணமாக தேங்காய் வெட்டுவது குறைந்துள்ளது. உற்பத்தி குறைவாக  உள்ளதாலும், பொங்கல் பண்டிகை வர உள்ளதாலும் தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் அதன் வரவு குறைவாகவே உள்ளது. உற்பத்தி குறைவாகவும் தேவை அதிகமாகவும் உள்ளதால் தேங்காய் விலை தற்போது அதிகரித்துள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரூ.6க்கு விற்ற சிறிய தேங்காய் தற்போது ரூ.8 முதல் ரூ.9  வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.15க்கு விற்ற நடுத்தர தேங்காய் தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய தேங்காய் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.23 ஆயிரத்து 500க்கு விற்ற ஒரு டன் தேங்காய் தற்போது ரூ.29 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Arcot , Coconut price up to Rs 6,000 per tonne in Arcot region: Farmers happy
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...