×

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 ஆண்டாக அடிப்படை வசதி இல்லை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதியான குடிநீர், சாலை, மின்சார வசதியின்றி தவிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கனவை தமிழக அரசு நிறைவேற்றுமா என காத்திருக்கும் மக்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கால்நடை மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலம் அமைந்துள்ள இடத்தின் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக 25 குடும்பங்கள் அந்த இடத்தில் இரண்டு தலைமுறையாக குடியிருந்து வந்தனர்.

அரசு பணிகளுக்காக அரசு கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்பதற்காக அந்த இடத்தில் குடியிருந்த 25 குடும்பங்களை காலி செய்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள முள்செடிகள் நிறைந்த காடுகளில் 25 குடும்பங்களுக்கு
இடம் ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் இடம் கொடுத்தது.

அந்த இடம் ஒதுக்கி கொடுத்ததை தவிர அந்த 25 குடும்பங்களுக்கு சாலை வசதி, மின்சாரம், குடிநீர் என அடிப்படை வசதிகளை இதுவரை செய்து கொடுக்கவில்லை. ஆகையால் அந்த 25 குடும்பங்களில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு தேடி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். மீதமுள்ள குடும்பங்கள் தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

ஏனென்றால் இவர்களுக்கு வேறு எவ்வித இடமும், வேறு வலியும் இல்லாததால் அதே இடத்தில் வசித்து வருகின்றனர். ஆனால் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த குடும்பங்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் மாவட்ட நிர்வாகம் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு மேலாக தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதல்வர் என பல்வேறு இடங்களிலும் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். தங்களது இடங்களை அரசு எடுத்துக் கொண்டாலும், அதற்கு தகுந்தார் போல் காட்டு பகுதியில் இடம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இடத்தை கொடுத்து விட்டோம் என்ற பெயரில், அதோடு முடிந்து விட்டது என நினைத்துகொண்டு அதற்கு பிறகு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் மாவட்ட நிர்வாகம் எங்களை கைவிட்டு விட்டனர் எனக் கூறப்படுகிறது.அங்கு கொடிய விஷம் கொண்ட பாம்புகள், பூச்சிகள் உள்ள பகுதியாக உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் தங்கள் பகுதிக்கு செல்ல முடியாது என்பதால் அங்கு வசிக்கும் மக்கள் ஆறு மணிக்குள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது உள்ள மாவட்ட கலெக்டரிடம், கடந்த மாதங்களில் புகார் கொடுத்தோம். மாவட்ட ஆட்சியர் இடத்தை கொடுத்தால் அவர்களுக்கு உரிய சாலை வசதிகளை செய்து தர வேண்டும். அந்த சாலை வசதி தற்போது நிலவியல் பாதையாக உள்ளதால் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. அதை மாவட்ட நிர்வாகம் தான் எடுத்துக் கொடுத்து அந்த குடும்பங்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என தெரிவித்திருந்தார்.



Tags : Krishnarayapuram government , Krishnarayapuram municipality lacks basic amenities for 15 years: Citizens urge action
× RELATED கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் 114 மாணவ, மாணவிகள் 11ம் வகுப்பு தேர்வெழுதினர்