×

கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில் நேற்று வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின்போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறை மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை போலீஸ் பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின்போது கடும் கவனக்குறைவு இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304A பிரிவில் வழக்கு தொடர வேண்டும். அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. உயர் நீதிமன்றமும்,  உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. நோயாளியின் காலை, சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லி ஜென்சில் மட்டுமே வரும். போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும்.

அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது.

Tags : Government Medical Association ,Chief Minister , Only disciplinary action should be taken in the case of the death of the football player: Government Medical Association urges the Chief Minister
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...