×

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு எதிரொலி சென்னையில் 4 வீடுகளில் என்ஐஏ மீண்டும் சோதனை: செல்போன், சூட்கேஸ், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்; வீடுகள் முன்பு போலீஸ் குவிப்பு

சென்னை: தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள 4 பேர் வீடுகளில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், சூட்கேஸ், முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சிகளை சென்னை மாநகர போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10ம்தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு போன்றவற்றை வழங்கி, பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து, தமிழக காவல் துறைக்கு அனுப்பியிருந்தது. அதில், சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஏற்கனவே கடந்த 14ம்தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில், சென்னை போலீசார் சோதனை மேற்கொண்டு, சுமார் 120 முக்கிய ஆவணங்களையும், ரூ.10 லட்சத்துக்கும் மேலான ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் சென்னை மாநகர போலீசார் திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஓட்டேரி எஸ்.எஸ். புரத்தில் சாகுல் ஹமீது என்பவரது வீடு, வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.எம். புஹாரி மற்றும் ஏழுகிணறு பிடாரியார் கோயில் தெருவில் உள்ள உமர் முக்தார், வி.வி.எம் தெருவில் உள்ள முகமது ஈசாக் கவுத் ஆகியோரின் வீடுகளில் சென்னை மாநகர போலீசார் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், ஓட்டேரி எஸ்எஸ்.புரத்தில் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற சோதனையில் ஒரு செல்போன் மற்றும் ஒரு சூட்கேஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் செல்போன், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இவர்கள், சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாகவும், இதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி அதன் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : NIA ,Chennai , NIA raids again at 4 houses in Chennai echoing links with terrorist movements: cell phones, suitcases, important documents seized; Police gathering in front of houses
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...