×

ராயபுரம் தொகுதி 51வது வார்டில் மின்தடை ஏற்படுவதை தடுக்க 2 புதிய மின்மாற்றிகள் அமைப்பு

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 51வது வார்டு, வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை சாலை, நைனியப்பன் தோட்டம், கம்பெனி சத்திரம் மற்றும் குருவப்பா தெரு ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இதற்கு தீர்வுகாண வேண்டும் எனவும் பொதுமக்கள் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்திக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரிடம் எம்எல்ஏ இதுதொடர்பாக, கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், இந்த பகுதிகளில் புதிதாக ரூ.21 லட்சத்தில் மேற்கு கல்லறை சாலையில் ஒரு மின்மாற்றியும், குருவப்பா தெருவில் ஒரு மின்மாற்றியும் மற்றும் மின் சுற்றும் புதிதாக அமைக்கப்பட்டது.

இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கலந்துகொண்டு இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அப்போது, இனி இந்த பகுதியில் மின்தடை ஏற்படாது என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்த மின்மாற்றியை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனே, அதிகாரிகள் அந்த மின்மாற்றியை சரி செய்து விடுவதாக கூறினர். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி 5வது மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, திமுக பகுதி செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஜெகதீசன், மின்வாரிய துறை பகுதி செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் மற்றும் பொதுமக்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : Ward 51 ,Rayapuram block , Installation of 2 new transformers to prevent blackouts in Ward 51, Rayapuram block
× RELATED ராயபுரம் தொகுதி 51வது வார்டில் மின்தடை...