சென்னை அருகே ஆசைக்கு இணங்க மறுத்ததால் விபரீதம் கள்ளக்காதலியின் மகளை கொன்று பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்: மும்பையில் தனிப்படை சுற்றிவளைப்பு; விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலம்

சென்னை: சென்னை அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியின் மகளை கொலை செய்து பலாத்காரம் செய்து விட்டு, நகை, பணத்துடன் தலைமறைவான கள்ளக்காதலனை தனிப்படை போலீசார் மும்பையில் அதிரடியாக கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, தனது  மகள் சங்கீதா(18)வுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அம்சவல்லிக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜூ (38) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, அவர் அடிக்கடி அம்சவல்லியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம்  வீட்டில் தனியாக இருந்த அம்சவல்லியின் மகள் சங்கீதா படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், அம்சவல்லி வேலைக்கு சென்ற பிறகு, சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு  வந்த கள்ளக்காதலன் ராஜூ, அவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு பலாத்காரம் செய்ததும், கம்மல், கொலுசு போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு மும்பைக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மும்பைக்கு தப்பிச் சென்ற  ராஜூவை பிடிக்க உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மும்பைக்கு விரைந்து சென்ற தனிப்படையினர் அங்கு பதுங்கியிருந்த ராஜூவை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,  ‘‘உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் ராஜூ. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து விட்டார். சிறிது காலம் மும்பையில் இருந்த ராஜூ மீது அங்கு பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், பூந்தமல்லியில் வசித்தபோது அம்சவல்லியுடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. அம்சவல்லியை சந்திக்க வந்தபோது சங்கீதாவை பார்த்த ராஜூ அவரை அடைய நினைத்துள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவிடம் ஆசைக்கு இணங்குமாறு ராஜூ வற்புறுத்தியுள்ளார். அதற்கு சங்கீதா மறுத்ததால், அவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு அதன்பிறகு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் நகை, பணத்துக்காக கொலை நடந்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக கம்மல், கொலுசு, பணத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்கு தப்பியோடி விட்டார். மும்பையிலிருந்து ராஜூவை பூந்தமல்லிக்கு அழைத்து வந்த பிறகு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்’’ என தெரிவித்தனர்.

Related Stories: