திருவொற்றியூர் எம்எல்ஏ நிதியிலிருந்து கத்திவாக்கம் கிளை நூலகம் புதுப்பிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் எம்எல்ஏ நிதியிலிருந்து, பழுதடைந்துள்ள கத்திவாக்கம் கிளை நூலகத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம், எம்எல்ஏ கே.பி.சங்கர் வழங்கினார். திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கத்திவாக்கம் பஜார் தெருவில் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. 1962ல் துவங்கப்பட்ட இந்த நூலகத்தை, சுற்றுவட்டார பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த நூலகம் போதிய அடிப்படை வசதியில்லாமல் பழுதடைந்திருந்தது. இதனால், புத்தகம் படிக்க வரும் வாசகர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

கடந்த, மே மாதம் 7ம்தேதி சட்டமன்ற கூட்டத்தில், கத்திவாக்கம் கிளை நூலகத்தை புதுப்பித்து தரவேண்டும் என திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, பழுதடைந்துள்ள நூலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கே.பி.சங்கர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த, நிதியின் மூலம் அனைத்து வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலகம் அமைக்கும் பணிக்கான ஒப்புதல் கடிதத்தை கே.பி.சங்கர் எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து வழங்கினார்.

அப்போது, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சரிவர பராமரிக்காததால் எண்ணூர் நெட்டுக்குப்பம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. சத்தியமூர்த்தி நகர், காலடிப்பேட்டை, திருவொற்றியூர் பூப்பந்தாட்ட பள்ளி, மணலி நடுநிலைப்பள்ளி போன்ற பள்ளிகள் மிகவும் சேதமடைந்து இருக்கிறது. இதை சீர்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைக்கேட்ட மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, `பொதுப்பணித்துறை வசமுள்ள பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளோம். விரைவில் புறநகர் பகுதியில் உள்ள பள்ளிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு சீரமைக்கப்படும்’ என தெரிவித்தார்.

Related Stories: