பாரம்பரிய வார விழாவில் புராதன சின்னங்களை ரசித்த வெளிநாட்டினர்: வேட்டி, சட்டையில் அசத்தல்

சென்னை: பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் வெளிநாட்டினர் வேட்டி, சட்டை அணிந்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தனர். உலகம் முழுவதும் புராதன சின்னங்களை போற்றவும், பாதுகாக்கவும் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை பாரம்பரிய வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில், இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க தொல்லியல்துறை நேற்று இலவச அனுமதி வழங்கியது.

இந்நிலையில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பொறியாளர்கள் மாமல்லபுரம் வந்து, தமிழரின் பராம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை கல் பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசித்து நகரின் பல்வேறு தெருக்களில் உலாவந்தனர். இதையடுத்து, வெண்ணெய் உருண்டை கல் பாறை முன்பு  புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வேட்டி, சட்டை அணிந்து வந்த வெளிநாட்டினரை அங்கு வந்த சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும், நேற்று இலவச அனுமதி என்பதாலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமாக குவிந்ததாலும் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் களைகட்டியது.

Related Stories: