டெல்லி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருநபர் கால்களை அழுத்தி, மசாஜ் செய்து விடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதியப்பட்டது. அவரை கடந்த மே 30ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில், திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வீடியோ  தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் சிறையில் சத்யேந்தர் ஜெயின், சில பேப்பர்களை படித்துக்கொண்டு இருக்க, அவருக்கு வெள்ளை நிற டிசர்ட் அணிந்து இருக்கும் ஒருவர் கால்களை அழுத்திவிட்டு, மசாஜ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை, சத்யேந்தர் ஜாமீன் மனு மீதான வழக்கில் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ தனது வாதத்தில், ‘அடையாளம் தெரியாத நபர்கள் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்து விடுகின்றனர். அவருக்கு சிறப்பு உணவுகள் வெளியில் இருந்து கொண்டு வந்து தரப்படுகின்றன. சிறையிலும், மருத்துவமனையிலும் சொகுசு வசதிகளை சத்யேந்தர் அனுபவித்து வருகிறார்,’ என குற்றம்சாட்டி உள்ளார்.  இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடும்படி எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

* முதுகுத்தண்டு காயத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை

டெல்லி துணை முதல்வர் சிசோடியா கூறுகையில், ‘‘சத்யேந்தர் ஜெயின் சிறையில் இருக்கும் போது கீழே விழுந்ததால் முதுகுத்தண்டில் காயம் அடைந்தார். இதனால் இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவர் அவருக்கு தினமும் பிசியோதெரபி சிகிச்சை செய்யும்படி பரிந்துரைத்தார். அதன்படி, அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்படுகிறது. டெல்லி மாநகராட்சி தேர்தல், குஜராத் சட்டசபை தேர்தல்களில் பாஜ தோல்வி முகத்தில் உள்ளது. அதனால்தான் அவர்கள் இதுபோன்ற மலிவான நாடகங்களை நடத்துகிறார்கள்,’’ என்றார்.

* கெஜ்ரிவால் ஏன் மவுனம்?

அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறை அறையில் மசாஜ் செய்வது தொடர்பான வீடியோ வெளியான பிறகும் முதல்வர் கெஜ்ரிவால் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய பா.ஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, ஆம் ஆத்மி கட்சி ‘ஸ்பா மற்றும் மசாஜ் பார்ட்டி’ ஆகிவிட்டது என்று தெரிவித்தார்.

Related Stories: