தோஹா: ஃபிபா உலக கோப்பை கால்பந்து திருவிழா, கத்தார் நாட்டின் அல் கோர் நகரில் உள்ள அல் பேட் ஸ்டேடியத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.
உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், 1930ல் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 1942 மற்றும் 1946ல் உலகப் போர் காரணமாக நடத்தப்படாத நிலையில், 22வது தொடர் கத்தாரில் இன்று தொடங்கி டிச.18ம் தேதி வரை நடக்க உள்ளது.
போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கத்தார் அணி முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்குகிறது. அந்த அணியுடன், உலகம் முழுவதும் 6 கண்டங்களில் நடந்த தகுதிச் சுற்று போட்டிகளில் இருந்து தேர்வான 31 அணிகளும் சேர்ந்து சாம்பியன் பட்டம் வெல்ல வரிந்துகட்டுகின்றன. தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகளில் லீக் சுற்று நடைபெற உள்ளது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்- அவுட் சுற்றுக்கு முன்னேறும். காலிறுதிக்கு முந்தைய சுற்று டிச. 3ல் தொடங்குகிறது. டிச.9-11 வரை காலிறுதி ஆட்டங்களும், டிச. 14, 15ல் அரையிறுதி, டிச.18ல் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளன.
பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை உலக கோப்பையை முத்தமிட்டுள்ள நிலையில், ஜெர்மனி மற்றும் இத்தாலி அணிகள் தலா 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன. அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே தலா 2 முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் தலா ஒரு முறையும் கோப்பையை தட்டிச் சென்றுள்ளன. தற்போது கத்தாரில் நடக்கும் 22வது உலக கோப்பையில் பட்டம் வெல்ல நடப்பு சாம்பியன் பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
நான்கு முறை சாம்பியனான இத்தாலி, கொலம்பியா, பெரு, சிலி, எகிப்து போன்ற பிரபல அணிகள் இம்முறை பிரதான சுற்றுக்கு தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர் (பிரேசில்) உள்பட பல முன்னணி வீரர்களுக்கு இதுவே கடைசி உலக கோப்பையாக அமையும் வாய்ப்பு இருப்பதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30, மாலை 6.30, இரவு 9.30 மற்றும் இரவு 12.30க்கு தொடங்க உள்ளன. ஸ்போர்ட்ஸ் 18 சேனல்கள் மற்றும் ஜியோ ஆப்-ல் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம். தொடக்க நாளான இன்று இரவு 9.30க்கு தொடங்கும் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் கத்தார் - ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.
* உலக கோப்பை வரலாற்றிலேயே மிக அதிகமான செலவில் நடத்தப்படும் தொடர் இது. இந்த தொடரை நடத்துவதற்காக கத்தார் நாடு சுமார் 17.5 லட்சம் கோடி ரூபாயை வாரி இறைத்துள்ளது. மிகச் சிறிய நாடான அதன் மக்கள் தொகை வெறும் 30 லட்சம் மட்டுமே!
* கத்தார் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த தொடரை நடத்துவதற்கான உரிமம் பெற்றதில் ஊழல், ஸ்டேடிய கட்டுமானப் பணியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பலி, மனித உரிமை மீறல்கள் என சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.
ஆசியாவில் இருந்து...
* ஆசியாவில் இருந்து தகுதி பெறுவதற்காக இந்தியா உட்பட 46 நாடுகள் களமிறங்கின. 2019 ஜூன் - 2022 ஜூன் வரை தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடந்தன. இந்த சுற்றின் முடிவில் ஈரான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஜப்பான் அணிகள் உலக கோப்பைக்கு முன்னேறின.
* ஆஸ்திரலேியா, நியூசிலாந்து, பிஜி, டோங்கா, பப்புவா நியூ கினியா உட்பட பல்வேறு தீவு நாடுகள் ஒசியானிக் கால்பந்து கூட்டமைப்பில் இருக்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் இணைந்துள்ளன. அதனால் ஆஸ்திரேலியா இந்த முறையும் ஆசிய கண்டத்தின் சார்பில் உலக கோப்பையில் களமிறங்கியுள்ள 6வது நாடாக உள்ளது.
* ஆசிய நாடுகளில் 2வது முறையாக உலக கோப்பை போட்டி நடக்கிறது. முன்னதாக, 2002ல் ஜப்பான் - தென் கொரியா இணைந்து உலக கோப்பையை நடத்தியுள்ளன.
கண்டம் காண்டம்!
* ஆப்ரிக்க கண்டத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே உலக கோப்பை போட்டி நடந்துள்ளது. அதை 2010ல் தென் ஆப்ரிக்கா நடத்தியது.
* ஆஸி., நியூசி உள்ளிட்ட ஓசியானிக் நாடுகளில் இதுவரை உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்ததில்லை.
* வட அமெரிக்க, கரிபீயன் நாடுகளான மெக்சிகோவில் 1970, 1986லும், அமெரிக்காவில் 1986லும் உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன.
* 2026 உலக கோப்பையை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்த உள்ளன.
* தென் அமெரிக்க நாடான உருகுவேயில்தான் முதல் உலக கோப்பை போட்டி 1930ல் நடந்தது. பிரேசில் 1950, 2014, சிலி 1962, அர்ஜென்டினா 1978ல் உலக கோப்பை போட்டிகளை நடத்தியுள்ளன.
* அதிக முறை உலக கோப்பையை நடத்திய கண்டங்களில் பட்டியலில் ஐரோப்பாவுக்கே முதலிடம். அங்கு 11 உலக கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. இத்தாலியில் 1934, 1990, பிரான்சில் 1938, 1998, சுவிட்சர்லாந்து 1954, சுவீடன் 1958, இங்கிலாந்து 1966, மேற்கு ஜெர்மனி 1974, ஸ்பெயின் 1982, ஜெர்மனி 2006, ரஷ்யா 2018லும் போட்டியை நடத்தியுள்ளன.
இளம் கன்று பயமறியாது
* உலக கோப்பை வரலாற்றில் இளம் வயதில் களம் கண்ட வீரராக வடக்கு அயர்லாந்தின் நார்மன் ஒயிட்சைடு முதல் இடத்தில் உள்ளார் (1982 உலக கோப்பை, 17 வயது 40 நாள்).
* உலக நாயகன் பீலே (பிரேசில்) 1958ல் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியபோது அவரது வயது 17 ஆண்டு 234 நாட்கள்தான். இளம் வீரர் பட்டியலில் அவர் 5வது இடத்தில் உள்ளார்.
* கத்தார் உலக கோப்பையில் களமிறங்கும் மிக இளம் வயது வீரர் ஜெர்மனியின் யூசப்பவுஃபோ. அவருக்கு இன்றுதான் 18 வயது பூர்த்தியாகிறது.
* வயதான வீரர்கள் பட்டியலில் உள்ள அடிபா ஹட்சின்சன் (கனடா), பேப் (போர்ச்சுகல்), எஜி கஸிமா (ஜப்பான்), டானி அல்வேஸ் (பிரசேில்), ரெம்கோ பஸ்வீர் (நெதர்லாந்து) ஆகியோருக்கு 39 வயதாகிறது.
* ஸ்டெபானி ஃப்ரப்பார்ட் (பிரான்ஸ்), சலிமா முகன்சங்கா (ருவாண்டா), யோஷிமி யாமஷிடா (ஜப்பான்) ஆகிய 3 பெண் நடுவர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 36 நடுவர்கள், 69 உதவி நடுவர்கள், 24 காணொளி அலுவலர்கள் இந்த உலக கோப்பையில் பணியாற்ற உள்ளனர்.
எல்லாம் கோல் மயம்
* ஒரே உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர் ஜெஸ்ட் ஃபோன்டைன் (பிரான்ஸ்). அவர் 1954 சுவீட்சர்லாந்து உலக கோப்பையில் 13 கோல் அடித்தார். ஆனால் அந்த ஆண்டு பிரேசில்தான் கோப்பையை தட்டிச் சென்றது. சாண்டோர் பீட்டர் ( ஹங்கேரி) 1954 உலக கோப்பையில் 11 கோல் அடித்துள்ளார்.
* ஜெரால்டு முல்லர் (மேற்கு ஜெர்மனி) 1970ல் 10 கோல் அடித்து 3வது இடத்தை பிடித்துள்ளார். அட்மிர் மார்க்கியூஸ் (1938, பிரேசில்), யூசப்யோ டா சில்வா (1966, போர்ச்சுகல்) தலா 9 கோல் அடித்து 4வது இடத்தில் உள்ளனர்.
* தொடக்க விழா
22வது உலக கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழா, அல் பேட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா போல மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இதில் பங்கேற்கும் பிரபல கலைஞர்கள் பற்றிய முழு விவரங்களை அறிவிக்காமல் போட்டி நிர்வாகம் ரகசியம் காத்தாலும்… தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவான பிடிஎஸ்-ன் ஜங்குக் ‘ட்ரீமர்ஸ்’ என்ற பாடலை பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இசைக் கலைஞர்கள் ஷகிரா, பிளேக் ஐடு பீஸ், ராபி வில்லியம்ஸ், நோரா பதேஹி, டுவா லிபா ஆகியோர் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் அவர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை.
* பரிசு மழை
கத்தார் உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.3586 கோடி வழங்கப்பட உள்ளது. இது 2018ல் ரஷ்யாவில் நடந்த உலக கோப்பையில் வழங்கப்பட்டதை விட ரூ.328 கோடி அதிகமாகும். சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை முத்தமிடும் அணிக்கு முதல் பரிசாக ரூ.342 கோடி வழங்கப்படும். பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடி கிடைக்கும். 3வது மற்றும் 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.219 கோடி, ரூ.203 கோடி வழங்கப்படும். காலிறுதியில் தோற்று வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.138 கோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடி மற்றும் லீக் சுற்றுடன் மூட்டை கட்டும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடி கிடைக்கும்.
* ஓ மெஸ்ஸி... டியர் மெஸ்ஸி!
உலக கோப்பை கால்பந்து தொடரையொட்டி அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரங்கள் டீகோ மரடோனா, லியோனல் மெஸ்ஸியின் புகழ்பாடும் பாடலை கோழிக்கோடு, மலபார் பல்கலை. வரலாற்றுத் துறை பேராசிரியர் வசிஷ்ட் எழுத அவரது மாணவி சிலு பாத்திமா இசையமைத்து பாடியுள்ளார். பிபா இணைய இதழில் ஆங்கிலம், ஜெர்மன், போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் இந்த பாடல் வெளியாகி உள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.