×

130 கோடி இந்தியர்களின் பொறுப்பு தமிழின் பாரம்பரியத்தை காப்போம்: காசி தமிழ் சங்கமம் விழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

வாரணாசி: ‘மொழி வேறுபாடுகளை களைந்து, தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு’ என காசி தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பிக்கும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாகவும், காசி தமிழ் சங்கமம் விழாவை ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. ஒரு மாத காலம் நடக்கும் இந்த விழாவை, உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்தில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில், கலாசார துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, இணை அமைச்சர் எல்.முருகன், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மத்தியில் பேசியதாவது: காசி-தமிழ் சங்கமம் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தின் கொண்டாட்டம். இது தனிச் சிறப்பு வாய்ந்தது, இணையற்றது. காசி நகரமும், தமிழ்நாடும் பழமை வாய்ந்தவை. கலாசார பெருமை வாய்ந்தவை. காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. காசிக்கு விஸ்வநாதர் என்றால், தமிழ்நாட்டிற்கு ராமேஸ்வரம். காசியில் துளசிதாசர் பிறந்தார் என்றால் தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பிறந்துள்ளார்.

காசியை போல் தமிழ்நாட்டிலும் பழமையான தட்சிண காசி அமைந்துள்ளது. காசியும், தமிழ்நாடும் சிவமயம், சக்திமயமானவை. சிவன்-சக்தியின் அருள் பெற்றவை. காசிக்கு பனாரஸ் பட்டு, தமிழ்நாட்டிற்கு காஞ்சிபுரம் பட்டு. தமிழர்களின் திருமணங்களில் காசி யாத்திரை செல்லும் சடங்கு உள்ளது. காசியும், தமிழ்நாடும் காலத்தால் அழியாத கலாசார மையங்களாகும். இரு பிராந்தியங்களும் சமஸ்கிருதம், தமிழ் என்ற இரு பழமையான மொழியை கொண்டுள்ளன. இந்து மத நம்பிக்கைகளின்படி முக்திக்கு வழிவகுக்கும் ஏழு யாத்திரை மையங்களான சப்த புரிகளில் காசி-காஞ்சிக்கு முக்கிய இடம் உண்டு. காசியின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு பல்வேறு வழிகளில் முக்கிய பங்காற்றி உள்ளது. தமிழ்நாட்டின் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார்.

பல நாடுகளும் தங்களின் பழமையான விஷயங்களை உலகிற்கு கூறி பெருமை கொள்கிறது. அதே போல் செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்தியா, அதன் பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவின் பழமையான பெருமைகளில் ஒன்று தமிழ் மொழி. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. இதில் நாம் பெருமை கொண்டு, தமிழ் மொழியை வலுப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும். அதை புறக்கணிப்பது தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். இந்த பழமையான மொழி பற்றி உலகிற்கு எடுத்து கூறும்போது, ​​ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. எனவே மொழி வேறுபாடுகளை களைந்து, தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாத்து உணர்வுப்பூர்வமான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* பனாரஸ் பல்கலை.யில் பாரதியாருக்கு இருக்கை
விழாவில் மோடி மேலும் பேசுகையில், ‘தமிழகத்தை சேர்ந்த மகாகவி பாரதியார் பல ஆண்டுகள் காசியில் வாழ்ந்துள்ளார். காசியில் தான் அவர் தனது முறுக்கு மீசையை வைக்க ஆரம்பித்தார். பனாரஸ் இந்து பல்கலையில், பாரதியார் இருக்கையை ஏற்படுத்தி பாரதியையும், தமிழ்நாட்டையும் சிறப்பிக்க உள்ளோம்,’ என தெரிவித்தார்.

* 13 மொழியில் திருக்குறள்
தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை மோடி வெளியிட்டார்.

தமிழில் பேச்சை தொடங்கிய மோடி
* பிரதமர் மோடி ‘வணக்கம் காசி’, ‘வணக்கம் தமிழ்நாடு’ என தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார்.
* காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிச. 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
* இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து ஆய்வாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் என பல்வேறு தரப்பை சேர்ந்த 2,500 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
* காசி-தமிழ்நாடு இடையேயான கலாசார உறவை பிரதிபலிக்கும் விதமான கண்காட்சிகள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

* காசிக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய பந்தம் உண்டு
நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், ‘‘காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பந்தம் இருக்கிறது. அந்த பந்தத்தை நாம் ஆண்டுகளில் கணக்கிட முடியாது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. பாண்டிய வம்சத்தை சேர்ந்த அதிவீரராம பாண்டியன் காசிக்கு யாத்திரையாக வந்தார். அவர் இங்கிருந்து திரும்பி சென்ற பிறகு, தென்காசியில் மிகப்பெரிய சிவாலயத்தை நிறுவினார். அதேபோன்று அவருடைய மூதாதையர்கள் நம்முடைய சிவகாசியில் ஆலயத்தை நிறுவினார்கள். தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு இன்று உத்தரப் பிரதேசத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாரதியார் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்,’’ என்றார்.

* இளையராஜா பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டல்
தொடக்க நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில், ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் வரும் ‘ஓம் சிவ ஹோம்’ என்ற பாடலை இளையராஜா தனது குழுவினருடன் பாடினார். மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி கையால் தாளமிட்டு, அந்த பாடலை வெகுவாக ரசித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, ‘‘பெருமை மிகுந்த காசியில் தமிழ் சங்கமம் நடத்தும் யோசனை பிரதமர் மோடிக்கு எப்படி வந்தது என்று வியந்துகொண்டிருக்கிறேன். மகாகவி பாரதியார் காசியில் தங்கியிருந்த 2 ஆண்டுகளில் பலவற்றை கற்றுக்கொண்டார். நதிநீர் இணைப்பு குறித்து 22 வயதில் பாரதியார் பாடி சென்றார். தற்போதுதான் நாம் அது பற்றி பேசுகிறோம். காசி நகரத்திற்கும், தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக தொடர்பு நீடிப்பது பெருமைக்குரியது’’ என்றார். அவர் பேசி முடித்ததும், அரங்கில் இருந்த பிரதமர் மோடி உட்பட அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.

Tags : Indians ,Modi ,Kashi Tamil Sangam Festival , Responsibility of 130 Crore Indians Let's Protect Tamil Heritage: PM Modi's Speech at the Inauguration of Kashi Tamil Sangam Festival
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...