×

குஜராத் பேரவை தேர்தல் முடிந்தவுடன் டிச. 7ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது: 23 நாட்களில் 17 அமர்வுகள் நடைபெறும் என்று தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர்  7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், 2017, 2018ம் ஆண்டுகளில் டிசம்பரில் குளிர்கால கூட்டத்ெதாடர் நடந்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் ( ரூ.1200 கோடி செலவில்) குறித்த  நேரத்தைக் காட்டிலும் நீண்டு செல்வதாலும், இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால  கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், இந்த குளிர்கால  கூட்டத்தொடரை பழைய கட்டிடத்திலேயே நடத்திவிட்டு அடுத்தாண்டுக்கான ஒன்றிய  பட்ஜெட் தொடரை புதிய கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1, 5ம் தேதிகளில் நடைபெற உள்ளதால், இந்தாண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடரும் டிசம்பரிலேயே நடைபெறவுள்ளது. இமாச்சல் பிரதேச மாநில தேர்தல் முடிவுகளும், குஜராத் தேர்தல் முடிவுகளும், சில மாநிலங்களில் நடைபெறும் இடைத் தேர்தல் முடிவுகளும் டிச. 8ம் தேதி வெளியாக உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும்.

வரவிருக்கிற குளிர்கால கூட்டத்தொடர் மொத்தம் 17 அமர்வுகளில் 23 நாட்கள் வரை செயல்படும். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற விவாதங்கள் இருக்கும். ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் முதல் நாள், உறுப்பினர்களின் மறைவையொட்டி ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை குறைந்த சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்ட நிலையில், பெரிய அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கூட்டம் நடைபெறும்.

மேலும் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 1500க்கும் மேற்பட்ட பழைய வழக்கொழிந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துதல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்கட்சிகள் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளன.


Tags : Gujarat Assembly , After the Gujarat Assembly elections, Dec. Parliament meets on 7th: 17 sessions in 23 days reported
× RELATED ராஜினாமா செய்து ஒருமாதம் கழித்து...