×

சமையற்கூடமாகும் பழநி அடிவார சாலை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழநி: பழநி அடிவார சாலைகளில் உணவு சமைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை துவங்கி உள்ளது. தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை  என வரும் மே மாதம் வரை பழநி அடிவார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலாலும் ஒரு குழுவாகவே வருகின்றனர். இவர்கள் பழநி அடிவாரத்தில் உள்ள ஐய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதி,  கிரிவீதி மற்றும் சுற்றுலா பஸ் நிலையங்களில் தங்களது வாகனங்கள் நிறுத்தி விட்டு அதன் அருகிலேயே சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.

சாப்பிட்டதும் இலை போன்ற எச்சில் கழிவுகளை அதே இடத்தில் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் அதனை உண்ண வரும் மாடு மற்றும் நாய் போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இப்பகுதியில் அதிகளவு அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சீசன் துவக்கத்தில் இருந்தே திருக்கோயில் நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் சாலைகளில் சமைப்பவர்களை கண்காணித்து, குப்பைகளை ஒரே இடத்தில் போட வைப்பது, குப்பைகளை தேங்க விடாமல் கூடுதல் ஆட்களை கொண்டு உடனுக்குடன் அள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அடிவாரம் பகுதியை சேர்ந்த பிரசன்னா கூறுகையில், ‘‘அடிவாரம், கிரிவீதி போன்றவை பக்தர்கள் அதிகம் வரும் பகுதிகளாகும். இப்பகுதியின் சுகாதார பணியை தனியார் மயமாக்க வேண்டும். இதற்கான தொகையை திருக்கோயில் நிர்வாகமே ஏற்க வேண்டும். தற்போது சீசன் துவங்கி விட்ட நிலையில் கூடுதல் சுகாதார பணியாளர்களை பணியமர்த்தி தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பக்தர்கள் சமையல் செய்து உணவருந்துவதற்கு வசதியாக அடிவார பகுதிகளில் உள்ள கோயில் ஓய்வு மண்டபங்களுக்கு அருகில் சமையற்கூடங்கள் அமைக்க வேண்டும்’’ என்றார். 


Tags : Palani Adiwara Road , Palani Adiwara Road, which is a kitchen: Request for action
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்