×

வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் விழாவில் 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி..

வாரணாசி: உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பாரம்பரிய, கலாச்சார தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில் வாரணாசியில் ஒருமாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வெட்டி சட்டை அணிந்து வருகை தந்த மோடி உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்தியநாத் முன்னிலையில் காசி தமிழ் சங்கமம் விழாவை தொடங்கி வைத்தார்.

திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் வழங்கியது. அதன்படி சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், சௌராட்டிரி, நரிக் குறவர்களின் வாக்ரிபோலி, படுகு, நேபாளி, அரபி, உருது, பாரசீகம், கெமர் ஆகிய 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இந்த நூல்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.  

காசி தமிழ் சங்கமம் விழாவில் பேசிய மோடி காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் பாரம்பரிய தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு கலாச்சார பெருமை வாய்ந்தது என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார். காசி போன்று தமிழ்நாடும் பழமை மற்றும் கலாச்சாரம் கொண்ட இடம் என்று மோடி கூறினார். காசி தமிழ் சங்கமம் விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறும் இந்த விழாவில் இரு மாநிலங்களில் கைத்தறி, கைவினை பொருள், புத்தக ஆவண படம், சமையல் தொடர்பான பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும் உத்திர பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.


Tags : Modi ,Kashi Tamil Sangam Festival ,Varanasi , Varanasi, Kashi, Tamil, Sangam, Festival, Thirukkural, Prime Minister, Modi
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி