வீட்டிற்கு வந்து தொந்தரவு கொடுத்ததால் திருமணமான காதலியை சந்திக்க வந்த காதலன் அடித்துக் கொலை: இரண்டரை வயது குழந்தையுடன் கர்ப்பிணி சிறையில் அடைப்பு

பாட்னா: பீகாரில் திருமணமான காதலியை சந்திக்க வந்த காதலனை, 4 பேர் சேர்ந்து அடித்து கொன்றனர். இவ்வழக்கில் இரண்டரை வயது குழந்தையுடன் கர்ப்பிணிப் பெண் உட்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பீகார் மாநிலம் ஆரா அடுத்த கிருஷ்ணகர் பகுதியைச் சேர்ந்த ராஜு பஸ்வான் - ரூபி தேவி தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது ரூபி தேவி, 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

ரூபி தேவிக்கு திருமணம் ஆவதற்கு முன்பாக, அவரை அதேபகுதியைச் சேர்ந்த சந்தன் திவாரி என்பவர் காதலித்து வந்தார். இந்த நிலையில் தனது காதலியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரது வீட்டிற்கு சந்தன் திவாரி வந்துள்ளார். அப்போது ரூபி தேவியின் கணவர் வீட்டில் இல்லை. சிறிது நேரத்தில் கணவர் ராஜூ பஸ்வான், அவரது தந்தை வீர் பகதூர் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். சந்தன் திவாரி குறித்து ரூபி தேவியிடம் அவர்கள் விசாரித்தனர். அவர், ‘என்னை அடிக்கடி சந்திக்க வருகிறார்.

திருமணம் ஆவதற்கு முன்பும் இதேபோல் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார்’ என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ராஜூ பஸ்வான், அவரது தந்தை வீர் பகதூர், முன்னாள் காதலி ரூபி தேவி ஆகியோர் சந்தன் திவாரியை அடித்துக் கொன்றனர்.

தகவலறிந்த போலீசார் சந்தன் திவாரியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கு போஜ்பூர் போலீஸ் எஸ்பி சஞ்சய் குமார் சிங்  கூறுகையில், ‘ஷாபூரைச் சேர்ந்த சந்தன் திவாரி, தனது முன்னாள் காதலி ரூபி தேவியை சந்திக்க வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து சந்தன் திவாரியை கொலை செய்தனர். கர்ப்பிணியான ரூபி தேவி, அவரது கணவர் ராஜூ பஸ்வான், அவரது தந்தை வீர் பகதூர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளோம். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கர்ப்பிணி ரூபி தேவிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருப்பதால், அந்த குழந்தையுடன் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளோம்’ என்றார்.

Related Stories: